தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் மறைந்த மாநிலச் செயலாளர் ஏ. ரமேஷ் அவர்களின் படத்திறப்பு விழா, முதலமைச்சர் அவர்களின் புகழ்பாடும் பாடல் வெளியீட்டு விழா, ஆசிரியர் முன்னேற்ற முழக்கம் இதழ் வெளியீடு, கடந்துவந்த பாதை மலர் வெளியீட்டு விழா, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 70 மாணவர்களுக்கு இளஞ்சூரியன் விருது வழங்கும் விழா, ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி ஆணை பிறப்பித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவாக 53 ஆயிரம் மாணவர்களுக்குப் பேனா வழங்கும் விழா ஆகிய ஐந்து விழாக்களை உள்ளடக்கி ஐம்பெரும் விழா நடைபெற்றது.
இன்று காலையில் தொடங்கிய ஐம்பெரும் விழாவின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,"பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே ஆசிரியர்களுக்கும், தி.மு.க இயக்கத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. ஆசிரியர்களுடன் மிகவும் நெருக்கமான உறவை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வைத்திருந்தார்.
இன்றைக்கு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆசிரியர்களின் நலன் காக்கும் உன்னதமான அரசாகத் திராவிட மாடல் அரசை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
தி.மு.க. வெற்றிபெறாத காலங்களில் கூட தபால் வாக்குகளில் எண்ணிக்கையில் நாம் தான் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளோம். காரணம் சொல்லவே வேண்டியதில்லை, ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் எப்போதும் வாக்களிப்பது தி.மு.கவுக்கு தான். ஆசிரியர்களின் நலனுக்காக நம்முடைய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஆசிரியர்களின் பணிகளைக் கழக அரசு என்றைக்குமே அங்கீகரிக்கத் தயங்கியது இல்லை. சமீபத்தில் கூட ஆசிரியர்களின் நலனுக்காக 250 கோடி ரூபாய் மதிப்பில் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்துத் தொடரப்பட்ட வழக்குகளை எல்லாம் நீக்கியது தி.மு.க அரசுதான்.
ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்குக் கடந்த காலங்களில் முறைகேடாகப் பணம் வசூல் செய்யப்பட்ட நிலையை நம்முடைய அரசு மாற்றி உள்ளது. எந்தவித முறைகேடு இல்லாமல் இன்றைக்கு சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.