தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆலையை உடனே மூடவேண்டும் என வலியுறுத்தி 2018ம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தை ஒடுக்கும் விதமாக அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் நடந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகிறது.
இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் பலியான 13 பேரில் புகைப்படங்களுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் தங்களின் அஞ்சலிகளைச் செலுத்தினார்கள் இதுபோல் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில்அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் தூத்துக்குடி நகர் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.