ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் அடங்குவர். தமிழ்நாட்டில் மொத்தம் 94% பேர் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
இந்த சூழலில் 6 பாடங்களிலும் 100-க்கு 100 என்று 600 மதிப்பெண் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு உதவி பெரும் பள்ளியான அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த நந்தினி என்ற மாணவி 600-க்கு 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சிறு வயதில் (LKG) இருந்து 12-ம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வரும் மாணவி நந்தினி படிப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார்.
இந்த வெற்றிக்கு காரணம் குறித்து மாணவி கூறுகையில், "கல்விதான் சொத்து என்றுகூறி என் பெற்றோர் என்னை வளர்த்தனர். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உந்துதலே என்னை சாதிக்க வைத்தது. நான் சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில் படித்து வருகிறேன்.
எனது பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, மரிய சாந்திராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆசிரியர்கள் தான் என்னை ஊக்கப்படுத்தினர். எனது வெற்றிக்கு உறுதுணையாக பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எனக்கு பி.காம். சி.ஏ. படிக்க வேண்டும் என்று விருப்பம்" என்றார். மாணவி நந்தினியின் தந்தை ஒரு கூலி தொழிலாளி ஆவார்.