விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மே தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
பின்னர் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், 12 மணி நேர வேலை திருத்தச் சட்ட மசோதாவை ரத்து செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவில் முதன்முதலாக மே தினம் கொண்டாடிய பெருமை சிங்காரவேலரைச் சாரும். நூறாவது ஆண்டு மே தினத்தை இன்றைக்கு கொண்டாடி வருகிறோம்.
இந்தியாவே ஆட்டி படைக்கின்ற முதலாவது கார்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்குகின்ற அதானி உடைய ஏஜெண்டாக இருக்கிற மதம் - சாதி என்ற பெயரில் இந்திய நாட்டு மக்களை பிளவுபடுத்துகின்ற மதவெறி ஆட்சியாக இருக்கக்கூடிய பாஜக ஆட்சியை வீழ்த்துகிற மகத்தான கடமையை இந்த மே தினத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதி ஏற்க கேட்டுக் கொள்கிறேன்.
சமீபத்தில் 12 மணி நேர வேலை திருத்த சட்ட மசோதோ வந்தபோது எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு எல்லாம் செய்தோம். இதனை நிறுத்தி வைத்தார். தற்போது அந்த மசோதாவை முதலமைச்சர் முழுமையாக திரும்ப பெற்றுள்ளார். அதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வருக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது. அதே போல் சாதிய ஏற்றத் தாழ்வு இன்றைக்கும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு கோடி கணக்கான உழைப்பாளி மக்களாக இருக்கக்கூடிய பட்டியல் இன மக்களின் சமமான வாழ்க்கை என்பது கனவாக இருந்து கொண்டிருக்கிற நிலைமை இருக்கிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை எவ்வாறு அமைக்க நினைக்கிறோமோ, அதே போல சாதி ஏற்ற தாழ்வு அனைத்தையும் ஒழித்து ஒரு சமத்துவ வாழ்க்கை அனைவருக்கும் உருவாக்க இந்த மே தின நன்னாளில் சூளுரைப்போம்.
நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக டி ஆர் பாலு கூறிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மதச்சார்பற்ற கூட்டணி எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.
அடுத்த மாதமே தேர்தல் வைத்தாலும் தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதியிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த பாஜகவின் தோல்வி கணக்கு எழுதப்பட்டு வருகிறது.
கர்நாடக தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என தகவல் வருகிறது. பாஜகவின் உள்ளவர்கள் காங்கிரஸை நோக்கி செல்ல துவங்கி உள்ளனர். இனிமேல் பாஜகவுக்கு எந்த தேர்தலாக இருந்தாலும் தோல்வி முகம்தான் என்பது எழுதப்படாத உண்மை" என்றார்.