தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக மழை என்பது பெய்து வருகிறது.
இந்த நிலையில் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான மல்லிகை கிருஷ்ணன் கோவில் வன்னியம்பட்டி பிள்ளையார் நத்தம், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
இந்த சூழலில் அந்த பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்தாய் (50), அவரது மகள் சங்கீதா (23), உறவினர்கள் சமுத்திரக்கனி, கிருஷ்ணவேணி (19), முத்துமாரி (37) ஆகியோர் விவசாய பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது பெய்த கனமழையில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் பொன்னுத்தாயும் அவரது மகன் சங்கீதாவும் படுகாயம் அடைந்தனர் .
இதே போல ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ் குமார் (35). இவர் மழை பெய்த போது தனது வீட்டு மாட்டு தொழுவத்தில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது. போஸ் குமாரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மின்னல் தாக்கியதில் மொத்தம் 6 பேர் காயமடைந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பொன்னுத்தாய் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது கோடை காலம் என்றும், மழை பெய்யாது என்றும் மக்கள் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என்று அப்பகுதி வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழையில் மின்னல் தாக்கியதில் ஓரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 5 பேர் படுகாயமடைந்து, ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.