தி.மு.க மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தி.மு.க மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அண்ணாமலைக்கு ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுபோன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பியும் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் தி.மு.க மீது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும், அரைவேக்காடு அரசியல்வாதி அண்ணாமலை என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாராயணசாமி, "தி.மு.க மீது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானது. அப்பட்டமாக பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகளை வைத்து தி.மு.க மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வேண்டும் என்றே கலங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இதன் மூலம் அண்ணாமலை அரசியலில் அனுபவமில்லாத அரைவேக்காடு அரசியல்வாதி என்பது உறுதியாகிவிட்டது" என தெரிவித்துள்ளார்.