தமிழ்நாட்டில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு :
தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும், இதன் காரணமாக தமிழக கடலோர கோவிலில் மழை தொடர வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை காரைக்கால், நாகப்பட்டினம் திருவாரூர் ஒரு சில இடங்களில் அதி-கனமழை பெய்யகூடும். மேலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக-கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது
27-ஆம் (நாளை) தேதி புதுச்சேரி ,மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், வடகடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.
28 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளில், நாளையும் நாளை மறுநாளும் தரை காற்றானது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மன்னார் வளைகுடா - தமிழக கடற்கரை ஒட்டி உள்ள பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது .மேலும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 328 mm. இது இந்த காலகட்டத்தின் சராசரி அளவை ஒட்டி பெய்துள்ளது. புயல் கரையை கடக்கும் இடத்தைப் பற்றி இன்னும் தகவல் கிடைக்கவில்லை. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்." என்றார்.