வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து தவறான செய்திகளை வெளியிட்ட அரசை அவமதித்து வருபவர்களுக்கு வேளாண்மை - உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கை வருமாறு:-
2021ஆம் ஆண்டில் வெளியான தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கை உருவாக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததுடன், வேளாண்மை என்று இருந்த துறையை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்து உழவர்கள் நலம் காத்திட தொடர் நடவடிக்கையினை தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் மூன்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 250 அறிவிப்புகளுக்கு, 242 அறிவிப்புகளுக்கான (97 சதவிகிதம்) நிதியினை ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இது பற்றியெல்லாம் சிறிதளவும் ஆராயாமல் ஒட்டுமொத்தமாக ‘வெறும் வாயில் சுட்ட வடையா வேளாண் பட்ஜெட்’ என்றும் ‘ஏமாற்றம் தந்த வேளாண் பட்ஜெட்’ என்றும் பத்திரிக்கைகளில் வெளியிடுவது வேளாண்மையை முன்னேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சியினை கேலி செய்வதாக உள்ளது.
வார்த்தை மாறாத திட்டங்கள்
இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர் பெருமக்கள் குறிப்பாக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் விவசாய சங்கங்கள், உற்பத்தி உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள், ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை எல்லாம் தொகுத்து ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையும் தயார் செய்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அங்கு விளையும் சிறப்பான பயிர்களுக்கான தேவை என்ன என்பதை விவசாயிகளிடம் கருத்து கேட்டறிந்து அதற்கென தனியாக திட்டம் தயாரித்து நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் இதுபோன்று அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்ற பகுதிகளுக்கு தெரிய வருவதில்லை. குறிப்பாக இதில் சில அறிவிப்புகள் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயனடைவதால், தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு சில திட்டங்களை செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், நெல் ஜெயராமன் மரபு சார் இயக்கம், வருடந்தோறும் சாதனை புரியும் விவசாயிகளுக்கான ஊக்கப் பரிசுத் தொகை வழங்குதல், தொடர்ந்து இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் இவையல்லாம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகும்.
இதுபோல, தொடர்ந்து வரும் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு செய்வது மிக முக்கியமாக காலம் தொட்டு கடைபிடிப்பது அரசின் வாடிக்கையான செயலாகும். எனவே, கடந்த வேளாண் பட்ஜெட்டில் வாசித்த பல திட்டங்கள் இந்த ஆண்டிலும் வார்த்தை மாறாமல் அமைச்சர் படித்திருக்கிறார் என்ற கூற்று சரியாகாது. உண்மைக்கு மாறான செய்தியாகும்.
வேளாண் நிதி நிலை அறிக்கையில் ஆண்டுவாரியாக நிதி ஒதுக்கீடு
2020-21 ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ.11,894.48 கோடி மட்டுமே. கடும் நிதி நெருக்கடியிலும் இவ்வாண்டு ரூ.14,254.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள 23 லட்சத்திற்கும் மேற்பட்ட வேளாண் பம்பு செட்டுகளுக்கான மின் கட்டணத்தையும் மாநில அரசே செலுத்தும் வகையில் கடும் நிதி பற்றாக்குறை இருந்த போதிலும், 2021-22 ஆம் ஆண்டில் ரூ.4508.23 கோடியும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.5157.56 கோடியும் ஒதுக்கப்பட்டது. நடப்பு 2023-24 ஆம் ஆண்டில் ரூ.6,536 கோடி ஒதுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் நிலத்தடி நீரை முழுவதுமாகப் பயன்படுத்தி சாகுபடி செய்ய ஏதுவாயிற்று.
இதையெல்லாம் முறையாகப் புரிந்து கொள்ளாமல் உழவருக்கு தனி பட்ஜெட் என்பதையே ஏமாற்று வேலையாக பார்க்கிறோம் என்ற கூற்று மிகவும் அபத்தமானது.
மதிப்புக்கூட்டலுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்பது தவறான கூற்று
இவ்வரசு பதவியேற்ற நாள் முதல், பயிர் சாகுபடி மட்டுமல்லாது அறுவடைக்குப் பின் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி, விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து விதமான பயிர்களுக்கும் திட்டங்களை அறிவிக்கும் போது. அறுவடைக்குப் பின்பு, மதிப்புக்கூட்டலுக்கும் முக்கியத்துவம் தந்து, போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய சிறுதானிய பதப்படுத்தும் மையங்களுக்கு மானியம், பழங்குடியின விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டி விற்பனை செய்திட 70 சதவீத மானியம், எண்ணெய் வித்துக்கள், மிளகாய், கறிவேப்பிலை, முருங்கை, பலா, பனைபொருட்கள் போன்ற விளைபொருட்களை உரிய தரத்துடன் மதிப்புக்கூட்டுவதற்கும், பொதுவாக மதிப்புக்கூட்டுதல், சிப்பம் கட்டுதல். ஏற்றுமதிக்கு பயிற்சி, வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி போன்று பல்வேறு வகைகளில் மதிப்புக்கூட்டலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது பற்றி எதுவுமே தெரியாமல் நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படிக்காமல், மதிப்புக்கூட்டல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறுவது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதுடன் அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையை சிறுமைப்படுத்துவதாக உள்ளது.
300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் பெயரளவுக்கு என்பது தவறு
“300 கோடி ரூபாய் மதிப்பில் கிராமங்களில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெயரளவுக்கு ஓரிரு இடங்களில் வழங்கப்பட்டது தவிர ஆக்கபூர்வமாக செயல்படுத்தப்படவில்லை இந்த ஆண்டும் மீண்டும் அதே திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என்பது வெறும் தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம் மட்டும் இல்லை. இத்திட்டத்தில், அனைத்து திட்டங்களையும் உள்ளடக்கி ஒரே கிராமத்தில் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, அந்த கிராமங்களில் தன்னிறைவை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆனால் கிராமங்களில் கடந்த 3 வருடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமலும், அறிந்து கொள்ளாமலும், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெறும் தென்னங்கன்று மட்டும் வழங்கியதாக கூறுவது திட்டத்தின் தனித் தன்மையை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்களின் பிதற்றலாகும்.
திண்டிவனம், தேனி, மணப்பாறை உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும் என்பதற்கான விவரம் இதுவரை இல்லை.
சென்ற 2022-23 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில், தேனி, திண்டிவனம், மணப்பாறை பகுதிகளில் 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுப் பூங்காக்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உணவுப் பூங்கா என்பது இன்று விதைத்து நாளை முளைக்கும் செயல் அல்ல. நிலம் கையகப்படுத்துதல் முதல் பொதுக்கட்டமைப்பை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது வரை நீண்ட காலம் பிடிக்கும் ஒரு செயலாகும். இத்திட்டத்தினை விரைவில் செயல்படுத்தும்வகையில், இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நபார்டு வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. பொது கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளுக்கான ஏலம் விடும் நடைமுறை துவங்கப்பட்டுள்ளது. மேலும், அரசானது இந்த திட்டப் பணியின் முன்னேற்றத்தினை கூர்ந்து ஆய்வு செய்து வருகிறது. முந்தைய ஆண்டில் அறிவிப்புகளின் முன்னேற்றத்தை அறிவிப்பு வாரியாக வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடுவது இயலாது. இது போன்ற திட்டங்கள் செயல்வடிவம் பெற்று, நடைமுறைக்கு வரும்போதுதான் முழுபலனும் விவசாயிகளுக்கு சென்று சேரும்.
சிறுதானியங்கள் நியாய விலைக்கடைகளில் விற்பனை துவக்கம்
சிறுதானிய பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ வழங்க கூட்டுறவுத்துறையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுதானிய விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட குறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர் மாநகர அமுதம், சிந்தாமணி, காமதேனு கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி, அனைத்துப் பகுதிகளிலும் சிறுதானியங்கள் கிடைத்திட அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
காய்கறிகள், சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க ஒதுக்கப்பட்ட நிதி மிகச் சொற்பம் என்பது தவறு
சிறுதானியங்களுக்காக ரூ.82 கோடியும், முருங்கைக்கு ரூ.11 கோடியும், தக்காளிக்கு ரூ.19 கோடியும், வெங்காயத்திற்கு ரூ.29 கோடியும், சௌசௌ, பட்டாணி, பீன்ஸ்க்கு ரூ.2.5 கோடி, பாரம்பரிய காய்கறி உற்பத்திக்கு ரூ.1.5 கோடி என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் நேரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர்ப் பாசனத்திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடிக்கும் மேல் ஒதுக்கப்பட்டு காய்கறி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறிகள், சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்க ஒதுக்கப்பட்ட நிதி மிகச் சொற்பம் என்பது தவறான செய்தி.
சந்தைப்படுத்துவதற்கான கட்டமைப்புகள் ஏதுமில்லை என்பதற்கு பதில்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்குதல், உழவர் சந்தைகளை புதுப்பித்தல், மின்னணு தேசிய வேளாண் சந்தைகளை விரிவுபடுத்துதல், 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுதல், செங்காந்தள் மலர் விதைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் வர்த்தகம், நவீன சிப்பம் கட்டுதல், வேளாண் ஏற்றுமதிக்கான பயிற்சிகள், 150 சேமிப்பு கிடங்குகள், 25 குளிர்பதனக் கிடங்குகளுக்கு மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது, குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொப்பரை, பயறு கொள்முதல் போன்ற பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதை, நிதிநிலை அறிக்கையினை முழுவதும் படித்திருந்தால் தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
கரும்புக்கு 4,000 ரூபாயும் நெல்லுக்கு 2,500 ரூபாயும் வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை
இவ்வரசு 2021 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றதும் ஓடாமல் இருந்த சர்க்கரை ஆலைகளை சீர்திருத்தம் செய்து அவ்வாலைகளை சிறப்பாக இயங்க வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு கரும்புக்கு ரூ.4,000 வழங்குவது என்பது 5 ஆண்டுகளில் நடைமுறைப் படுத்துவது ஆகும். டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்குவதை 5 ஆண்டுகளில் நிறைவேற்றிட பல சீரிய முயற்சிகளும் இவ்வரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் கரும்புக்கு 2016-17 முதல் 2019-20 முடிய டன்னுக்கு ரூ,2,750 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இவ்வரசு கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, 2020-21 ஆம் ஆண்டில் டன்னுக்கு ரூ.2,900/-ம். 2021-22 ஆம் ஆண்டில் ரூ.2,950/-ம் கிடைக்கும் வகையில், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து 2023-24 ஆம் ஆண்டில் டன்னுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகையினை அறிவித்துள்ளதால், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ,3,016.25/- கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், உயர் மகசூல் கரும்பு இரகங்களை ஊக்குவிக்கவும், சர்க்கரை ஆலைகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு பல்வேறு வழிகளில் உதவி வருகிறது.
மேலும், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில், மாநில அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையாக ரூ.250 கோடி அதிகரித்துள்ளது. தற்போது, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகை முழுவதும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரும்பு சாகுபடிப் பரப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 55 ஆயிரம் எக்டர் அதிகரித்துள்ளது. அரசின் அறிவிப்பினால், கரும்பு சாகுபடிப் பரப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரசின் அறிவிப்புகளை உதாசீனப்படுத்தும் வகையில் திரு.பி.ஆர்.பாண்டியன் கருத்து கூறியுள்ளார். கடும் நிதி நெருக்கடியிலும், கரும்பின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது இவ்வரசின் சாதனையாகும்.
அதே போன்று நெல்லுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் மாநில அரசின் ஊக்க தொகையும் குவிண்டாலுக்கு சன்ன இரகத்துக்கு ரூ.100ம், பொது இரகத்திற்கு ரூ.75ம் வழங்கி கொள்முதல் விலை தற்போது, சன்ன இரகத்துக்கு ரூ.2,160ம், பொது இரகத்திற்கு ரூ.2,115ம் கிடைத்து வருகிறது. மேலும் தேவையான இடங்களில் அதிக எண்ணிக்கையில், நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதன் காரணமாக, தற்போது நெல் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டி வருகின்றனர். இவ்வாறு நெல்லுக்கு வழங்கப்பட்டுவரும் மாநில அரசின் ஊக்கத்தொகை காரணமாக நெல் கொள்முதல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ரூ.220 கோடியாக இருந்து நெல் ஊக்கத்தொகைக்கான நிதியானது, தற்போது ரூ.500 கோடியாக உயர்ந்துள்ளது. நேரடி கொள்முதல் நிலையத்தை தவிர்த்து தனியார் வியாபாரிகளிடமிருந்தும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் அதிக விலை கிடைத்து வருவதே அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பின் காரணமாக நடப்பாண்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருந்தது என்பது உண்மைதான். இருப்பினும் அரசின் நிதி நிலைக்கு ஏற்ப பெரும்பாலான விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2023-24ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையினை படித்து பலதரப்பட்ட விவசாயிகளும் அறிஞர்களும் வேளாண்மையில் ஈடுபடும் அனைத்துத்தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கலைத் துறையை சார்ந்த பிரபல கலைஞர் ஒருவர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதுடன் அவர் எண்ணத்தை பிரதிபலித்த வேளாண் தொடர்பான ஒரு திட்டத்தினையும் இந்த நிதிநிலை அறிக்கையிலே சேர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான விமர்சனங்கள் பாராட்டும் வகையிலேயே உள்ளதைப் பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல், அரசுக்குக் கிடைத்த பாராட்டினை பொறுக்க முடியாமல், வேளாண் பட்ஜெட் பக்கத்துக்கு பக்கம் விமர்சனங்களைத் தான் வர வைத்து இருக்கிறது என்று கூறுவது அரசின் முயற்சியை சோர்வடைய செய்யும் நோக்கத்தில் இருந்தால், அது எந்நாளும் நிறைவேறாது. அரசு தன்முயற்சியை தொடர்ந்து முனைப்புடன் மேற்கொள்ளும்.
விவசாயிகளின் தேவை என்ன என்பதை அறிந்து அதனை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்றுவதற்கு அரசு தினமும் உழைத்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க நுண்ணீர் பாசன மானியம் பெறுவதற்கு தற்போதுள்ள அதிகபட்ச பரப்பான 5 ஏக்டரை 10 எக்டராக உயர்த்தவும், ஒரே நிலத்தில் மீண்டும் நுண்ணீர்ப் பாசனம் நிறுவுவதற்கான கால இடைவெளியை 7 ஆண்டகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், களஆய்வில் முதலமைச்சர் அவர்களே வேளாண்மைத்துறைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, ஆய்வு செய்து வருவதை அறிந்திருந்தால், இப்படி ஒரு கருத்தினை பிரசுரித்திருக்க மாட்டார்கள்.
ஆக்கபூர்வமான கருத்துக்கள் ஏதும் இருந்தால் அதனை அரசுக்கு தெரியப்படுத்தினால் அவர்களின் கருத்தினை வரவேற்க இவ்வரசு எப்போதும் தயாராக உள்ளது. அதை விடுத்து, வெறும் வாயில் வடை சுடும் பட்ஜெட்டாக வேளாண் பட்ஜெட்டை பார்க்கிறேன் என்பது வேளாண்மையை பற்றி அரசின் நடவடிக்கைகளை பற்றியும் சற்றும் தெளிவில்லாமல், தெரியாமல் வேளாண் நிதிநிலை அறிக்கையின் முக்கியத்துவத்தை உணராமல் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பேசுபவர்களின் கருத்தாக இருக்கலாம். முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பவர்கள் வெளியிட்ட கருத்து என்பது அவர்களின் கூற்றிலிருந்தே தெரிகிறது.
முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் முன்னர் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பி.ஆர். பாண்டியன் வேளாண் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் எந்தவித ஆக்கபூர்வமான கருத்தினை தெரிவிக்காமல் இருந்து விட்டு அல்லது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாத நிலையில், விவசாயமே பார்க்காத நபர் ஒருவர் தற்பொழுது விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல.
பொதுமக்களிடையே தனக்கென தனி இடம் பெற்றுள்ள பத்திரிக்கைகள் இது போன்று அரசை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை உபயோகிப்பது செய்தி வெளியிடுவதும், ஒருசிலரின் கருத்துக்களை, ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்தாக வெளியிடுவதும் வருந்தத்தக்கதாக உள்ளது.