தெலுங்கானா மாநிலத்தை சுப்பாராவ் - லட்சுமி தம்பதியினர் சென்னையில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் அமைந்துள்ள நகை கடைகளில் நகை வாங்குவதற்காக 60 லட்சம் எடுத்து கொண்டு சென்னை மாதவரம் வந்தடைந்துள்ளனர். அங்கிருந்து ஆட்டோ மூலம் சென்னை கொருக்குப்பேட்டை பழைய கிளாஸ் பேக்டரி பகுதிக்கு உட்பட்ட ஹரிநாராயணபுரம் பகுதியில் சாலையில் ஆட்டோவில் இருந்து நின்று கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் தம்பதியினர் வைத்திருந்த ரூபாய் 60 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு தெலுங்கானா மாநில பதிவு கொண்ட வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து செய்வதறியாமல் திகைத்து நின்ற தம்பதியினர், பின்னர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழிப்பறி சம்பவம் தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வழிப்பறி சமூகத்தில் ஈடுபட்டது தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், (24), தெலுங்கானா மாநிலம் ஜலகோண்டா மாவட்டம் பகுதியை சேர்ந்த ரமேஷ் பத்தினி (32), இவரது சகோதரர் மதுபத்தினி (29) மற்றும் ஆந்திரா மாநிலம் பள்ள நாடு பகுதியைச் சேர்ந்த புன்னாராவ் (35) ஆகிய நான்கு பேர் என்பது போலிஸாருக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் ஆர்.கே.நகர் போலிஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 20,81,500 பணம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் புன்னாராவ் என்பவர், சுப்பாராவை, ஆந்திர மாநில தங்கநகை வியாபாரி கிருஷ்ணாராவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளதும், அதன்பேரில், சுப்பாராவ் பணத்துடன் சென்னை செல்வது அறிந்து அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து சென்னைக்கு பணத்துடன் சுப்பாராவ் மற்றும் அவரது மனைவியிடம் இருந்து ரூ.60 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள இருவரை ஆர்கே நகர் போலிஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.