சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடம் தமிழ்நாட்டின் முதல் 14 மாடி கட்டடமாகும். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் எல்.ஐ.சி கட்டடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டடத்தின் கடைசி மேற்பகுதியில் உள்ள எல்.ஐ.சி பெயர் பொறிக்கப்பட்ட விளம்பரப் பலகையில், திடீர் மின் கசிவுக் காரணமாக தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டத்தில் அனைத்து பகுதிக்குச் செல்லும் மின் இனைப்பைத் துண்டித்தனர். பின்னர் ராட்சத கிரேன் மூலம் கட்டத்தின் மேற்பகுதியில் எரிந்த தீயை அனைத்தனர். தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் 5 நிமிடங்களிலேயே தீ அணைக்கப்பட்டது. இதற்கு முன்பாக 1975 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி எல்.ஐ.சி. கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.