வைக்கம் வீரர் வாழ்க!
வைக்கம் மகாதேவர் கோவில் தெருவில் அனைத்து சமூகத்தவரும் நடந்து செல்ல வழிவகை வகுத்த போராட்டம் தான் ‘வைக்கம் போராட்டம்’ ஆகும். 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் இது தொடங்கியது.
அந்த வெற்றிப் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன. வரிசையாக கேரளத் தலைவர்கள் அனைவரும் கைதான நிலையில் ஏப்ரல் 13 ஆம் நாள் தந்தை பெரியார் அவர்கள் அங்கு செல்கிறார். இறுதிவரையில் போராடுகிறார். வெற்றி பெறுகிறார். ‘வைக்கம் வீரர்’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களால் அப்போதே போற்றப்பட்டார். உண்மையான பட்டமாக இருந்தால் அது 100 ஆண்டுகள் நிலைக்கும் என்பதன் அடையாளமாக இருக்கிறது ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டம்!
கேரளாவில் 74 நாட்கள் சிறை வைக்கப்பட்டார் பெரியார். அரசியல் கைதிகளுக்கு உரிய மரியாதை தரப்படாமல் கொடுமைப்படுத்தப்பட்டார். இந்தப் போராட்டம் நடந்தபோதே பெரியாரின் தியாகம் போற்றப்பட்டது. ‘‘சிறை உடையை அவர் அணிகிறார். இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார். தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரக சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வளவுக்குப் பிறகும் ஈ.வெ.ராமசாமி மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகியிருக்கிறேன். அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சியையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். பெரும்பாலான நம்மைப் போல அல்ல, உண்மையிலேயே” என்று ‘சுதேசமித்திரன்’ இதழில் எழுதி இருக்கிறார் மூதறிஞர் இராஜாஜி அவர்கள்.
கேரளத் தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் அவர்கள், ‘‘ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக் கூடிய நாட்டுப்பற்று இந்த நாட்டில் இன்னொருவருக்கு இருக்க முடியுமா? இந்த கேரள நாட்டு மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு துன்பத்தையும் அனுபவிக்கலாம் என்று ஒரு தலைவர் வந்தாரே, அதைப் பார்த்து இந்த மாநிலத்து மக்களுக்கு வெட்கம் ஏற்படவில்லையா? கேரளாவின் முதிர்ந்த அனுபவமிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது முன் வர வேண்டாமா?” என்று எழுதினார்.
இந்த வீரமிகு போரில் பெரியாருடன் அவர் மனைவி நாகம்மாளும், தங்கை கண்ணம்மாளும் சேர்ந்து போய் போராடினார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்களை அழைத்துக் கொண்டு அந்தச் சாலையில் நடந்துபோனார் நாகம்மாள். அவரையும் அவருடன் சென்ற ஐந்து பெண்களையும் தடுத்து நிறுத்திய காவலர்கள், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஜாதி என்ன என்று சொல்லுங்கள்” என்று கேட்டார்.
“நாங்கள் ஜாதியைச் சொன்னால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களை மட்டும் உள்ளே விடாமல் தடுத்து விடுவீர்கள். அதனால் நாங்கள் சொல்ல மாட்டோம்” என்றார் நாகம்மையார். யாரையும் உள்ளே விட மாட்டோம் என்று தடுத்தார்கள் காவலர்கள். “எங்களைக் கைது செய்யுங்கள்” என்றார் நாகம்மாள்.
“உங்களைக் கைது செய்ய ஆட்சியாளர்கள் உத்தரவிடவில்லை, அதனால் கைது செய்ய மாட்டோம்” என்று காவலர்கள் சொன்னார்கள். எனவே சீர்திருத்தக் கருத்துகளை ஊர் ஊராகப் போய் பரப்புரை செய்தார்கள் நாகம்மையாரும் கண்ணம்மாளும். “பலத்த மழை பெய்த போதும் நாகம்மாள் அந்த இடத்தை விட்டுப் போகாமல் நின்று போராடினார்” என்று ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் எழுதுகிறது.
‘‘வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார், தீண்டாமை எனும் பேயரை வெட்டி வீழ்த்துவான்வேண்டி வைக்கம் சத்தியாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகை மாலையும் சூடினார்” - என்று நாகம்மையாரின் தியாகத்தை எழுதினார் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்.
கேரள பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் டி.கே.இரவீந்திரன் வைக்கம் போராட்ட ஆவணங்களை மையமாக வைத்து மிகப்பெரிய ஆய்வு நூலை எழுதினார். Eight Furlongs of Freedom –- என்பது அந்த நூலின் தலைப்பு ஆகும். அதில், ‘‘ஈ.வெ.ராமசாமியின் தலைமை இந்த இயக்கத்துக்கு புத்துயிர் ஊட்டியது” என்று எழுதி இருக்கிறார்.
இத்தகைய தியாகத்தால் கிடைத்தது வைக்கம் வெற்றி. கேரளாவைச் சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் பங்கெடுக்கக் கூடாது, மாற்று மதத்தவர்கள் இதில் பங்கேற்கக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளை காந்தியடிகள் போட்டாலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பெரியார் பரப்புரை செய்தது அதன் வெற்றியை உறுதி செய்தது. ‘சேர்த்தலை’ என்ற இடத்தில் பெரியார் பேசி முடித்ததும், ‘நாங்களும் பங்கேற்கிறோம்’ என்று 100 பெண்கள் பெயர் கொடுத்தார்கள். அத்தகைய எழுச்சியை உருவாக்கினார் பெரியார்.
வைக்கம் போராட்ட வெற்றி விழா 29.11.1925ல் நடந்த போது அதில் கலந்து கொள்ள பெரியாருக்கும் நாகம்மையாருக்கும் அழைப்பு வந்திருந்தது. பெரியாரைத் தலைமை வகிக்கச் சொன்னார்கள். ஆனால், தலைமை வகிக்க மறுத்து, வாழ்த்திப் பேசினார் பெரியார். ‘‘உரிமையை மறுத்த அரசாங்கமே இப்போது நம்மை கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது. இதுதான் சத்தியாகிரகத்துக்கு ஏற்பட்ட மகிமை. பலாத்காரப் போராட்டம் நடத்தியிருந்தால் கூட இந்த வெற்றியை இவ்வளவு சீக்கிரம் பெற்றிருக்க மாட்டோம்’ என்று பேசினார் பெரியார். இத்தகைய வெற்றியின் 100ஆம் ஆண்டுத் தொடக்கம் இது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களும் இணைந்து இந்த விழாவை நடத்துவது சிறப்பிலும் பெரும் சிறப்பு. இணைந்து போராடினோம். இணைந்து கொண்டாடுவோம்!