திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ண மூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. இவர்களுக்கு தற்போது 9 வயதில் பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சூழலில் தற்போது குழந்தைகள் கைகளில் மொபைல் போன்கள் உலாவி வருவதுபோல் பிரதிக்ஷாவும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் தனக்கென இன்ஸ்டா ஐடி ஒன்றை உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் தற்போது அனைவரையும் ஈர்த்த ரீல்ஸ் என்ற விஷயம் அவரையும் ஈரத்தால் தினமும் ரீல்ஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனாலே இவர் அந்த பகுதியில் இன்ஸ்டா பிரபலமாக அறியப்பட்டார். இதனால் சிறுமிக்கு படிப்பில் இருந்த கவனம் சிதறியிருக்கிறது. மேலும் படிக்காமல் விளையாடி வந்துள்ளார். அதே போல் சம்பவத்தன்றும் சிறுமி படிக்காமல் தனது பாட்டி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அவரது தந்தை, சிறுமியை படிக்கும்படி கண்டித்துள்ளார்.
இதையடுத்து வீட்டின் சாவியை சிறுமியிடம் கொடுத்துவிட்டு பெற்றோர் இருவரும் கடைக்கு வெளியே சென்றனர். சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்கள் பூட்டியிருந்த கதவை தட்டினர். மேலும் தங்கள் மகளையும் கத்தி அழைத்தனர். இருப்பினும் அந்த கதவு திறக்கப்படாததால் பதறிப்போன பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சிறுமி பிரதிக்ஷா அங்குள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறிக்கொண்டே தங்கள் மகளை மீட்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சுமார் சிறுமி பிரதிக்ஷாவுக்கு 1 மணி நேரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பிரதிக்ஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை படிக்க சொன்னதால் கோபப்பட்ட 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!