தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதில் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தைச் செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு. கடந்த 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி டெல்டா மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டது. வரலாறு காணாத அளவில் நேரடி கொள்முதல் மிக அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு
புஞ்சை நிலத்திலும் மகசூலை அதிகப்படுத்த புதிய பயிர்களை உண்டாக்குவது அவசியம். உழவர் சந்தை விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.