சென்னை இராயபுரம் புதுமனைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ருக்ஷனா. 22 வயதான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் பில்லிங் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவரது இன்ஸ்டா பக்கத்தில் உமா மகேஷ் என்பவர் பேசியுள்ளார்.
அதாவது கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்த சிசிடிவி டெக்னீஷியனாக இருக்கும் உமா மகேஷ் என்ற இளைஞர், இந்த இளம்பெண்ணுக்கு இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பியுள்ளார். தொடர்ந்து இருவரும் பேசி வந்த நிலையில், மகேஷ் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். அந்த பெண்ணும் அதனை நம்பி பேசி வந்துள்ளார்.
இப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலே பேசி வந்துள்ளனர். இதையடுத்து அண்மையில் மகேஷ் தனது குடும்பம் வறுமையில் கஷ்டப்படுவதாக அந்த பெண்ணிடம் அழாத குறையாக கூறியுள்ளார். மேலும் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், அதோடு தான் வேலை தேடி வருவதாகவும் கூறினார். இதனை நம்பிய அந்த பெண்ணும் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதோடு மகேஷ் அவ்வப்போது செலவுக்கு அந்த பெண்ணிடம் பணம் கேட்கவே, அந்த பெண்ணும் 20 முறைகளுக்கு மேல் வங்கி மூலம், Gpay மூலம் சுமார் 1.30 லட்சம் வரை மகேஷிடம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை 10 நாட்களுக்குள் திருப்பி தந்துவிடுவதாகவும் மகேஷ் கூறியுள்ளார். இதையடுத்து மகேஷிடம் அந்த பெண் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் இழுத்தடித்து வந்துள்ளார்.
அதோடு அந்த பணம், தனது அம்மாவுடையது என்றும், அவருக்கு தெரியாமல் தான் எடுத்துக்கொடுத்ததாகவும், எனவே விரைவில் கொடுக்குமாறு கெஞ்சியுள்ளார். இருந்த போதிலும், அதனை மகேஷ் செவி மடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், தனது உறவினர் உதவியோடு இராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதோடு மகேஷை தானே பிடித்து கொடுக்க எண்ணி, அவரை சந்திக்க அழைத்துள்ளார். மேலும் நாம் இருவரும் சந்தித்து பேசிக்கொள்ள வேண்டும் என்று கூறவே, மகேஷும் இராயபுரத்தில் அந்த பெண் சொன்ன இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த அந்த பெண்ணின் உறவினர்கள், மகேஷை மடக்கி பிடித்து இராயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவர் இதேபோல் வேறு எதுவும் பெண்ணை ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா என்ற கோணத்தில் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
20 நாட்கள் இன்ஸ்டா பழக்கத்தில் இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.1.30 லட்சத்தை ஏமாற்றிய இளைஞரை அந்த பெண்ணே காவல்துறையில் ஒப்படைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.