கனடா நாட்டைச் சேர்ந்த ஶ்ரீதரதாஸ் (67). இந்தியாவுக்கு வந்து, சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 03 ஆம் தேதி அன்று பாண்டி பஜாரில் உள்ள ஒரு கடையில் தன்னிடம் இருந்த வெளிநாட்டு டாலர் பணத்தை இந்திய பணமாக ரூபாய் 1,10,000 மாற்றிக் கொண்டு, அங்கேயே அமர்ந்துள்ளர்.
அப்போது அஜி ஷெரிப் என்ற நபர் ஶ்ரீதரதாஸிடம் பேச்சுக் கொடுத்து நானும் வெளிநாட்டுக்கு அடிக்கடி சென்று வருவதாகவும், இன்று இரவு மட்டும் தங்களது அறையில் தங்கிக் கொள்ளலாமா என கேட்டுள்ளார். இதற்கு ஶ்ரீதரதாஸும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
பின்னர் இருவரும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள லாட்ஜுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஒரு நபர் ஶ்ரீதரதாஸின் அறைக்கு வந்து தான் போலிஸ் அதிகாரி என்றும், தங்களது அறையில் போதைப் பொருள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும் அந்த நபர் தங்களது அறையை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, அறையை சோதனை செய்வது போல நடித்து ஶ்ரீதரதாஸ் வைத்திருந்த பணம் ரூபாய் 1,10,000, ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள கூலிங்கிளாஸ், ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள ஷு மற்றும் வெளிநாட்டு டாலர் பணத்தை அபகரித்துச் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து, ஶ்ரீதரதாஸ் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர், பாலக்காடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அஜி ஷெரிப் (45) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், நர்ச்சாந்துபட்டி, கலியமூர்த்தி, மலையலிங்கபுரம் பகுதியை சேர்ந்த (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும், அஜிஷெரிப், ஶ்ரீதரதாஸ் அறையில் தங்குவது போல சென்று, அவரது கூட்டாளி கலியமூர்த்திக்கு தகவல் கொடுத்து, போலிஸ் எனக்கூறி பணம் மற்றும் பொருட்களை அபகரித்துச் சென்று, பின்னர் இருவரும் பங்கு பிரித்துக் கொண்டது தெரியவந்தது.
பின்னர் இருவரை போலிஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து பணத்தில் வாங்கிய 8 கிராம் தங்க நாணயம், பணம் ரூபாய் 20 ஆயிரம், ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள கூலிங்கிளாஸ், ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள ஷு, வெளிநாட்டு டாலர் மற்றம் பவுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் சிறையில் அடைத்தனர்.