ஆன்லைன் மூலம் ஒவ்வோரு நாளும் புதிய வடிவில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் ஏராளமான ஆன்லைன் கடன் செயலிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோத கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.
சட்டவிரோத ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான செயலிகளை தடை செய்துள்ளது. ஆனாலும், மோசடி செயலிகளால் பாதிக்கப்படுவோர் அதிகரித்து வருகின்றனர்.
அதேபோல், சந்தைக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வாங்கும் பழக்கம் குறைந்து, வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் ஆன்லைன் மூலம் வாங்குவதையே மக்கள் தற்போது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
இதுபோன்று ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் பெரும்பாலானவை தரமற்றவையாகவும், குறித்த நேரத்தில் வந்து சேராமலும் இருக்கும். இதனால் பல இன்னல்களும் உண்டாகின்றன. சமயங்களில் போலியான ஆன்லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து ஏமாறும் நிலையும் ஏற்படும்.
அந்தவகையில் சமீபத்தில் GooglePay ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலி மூலம் மர்ம கும்பல் மோசடியில் ஈடுபடுவதாகவும் எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு செய்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில், “யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது GooglePay-க்கு அனுப்புகிறார். மேலும் பணத்தை உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் இருந்ததாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை அழைக்கிறார்.
அதனை தொடர்ந்து. பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும். எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் பெற்றிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
இந்த மோசடி இப்போதுதான் தொடங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.என்றும் தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.மேலும் பொதுமக்கள் கவனத்தோடு கையாள வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.