தற்போதைய சூழ்நிலையில் வட மாநிலத்தவர் குறித்து தவறான சிந்தனைகள் மக்கள் மனதில் இருக்கிறது. ஒருவர் செய்த தவறால் அனைத்துமே அப்படிதான் இருக்கும் என்ற எண்ணம் பெரிதளவு காணப்படுகிறது. வட மாநில தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் வேலைக்கு வருகிறார்கள்.
வெளி மாநிலங்களில் அவர்களுக்கு கிடைக்கும் கூலி என்பது குறைவு என்றாலும், அவர்கள் சூழ்நிலைக்கு அது மிகவும் அவசியமாகவே கருதப்படுகிறது. அதோடு சில வட மாநிலத்தவர்கள் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில செய்கைகளை செய்வதால் அனைவரும் அப்படிதான் இருப்பர் என்ற கண்ணோட்டத்திலே மக்கள் அவர்களை அணுகுகின்றனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து வருவதில் இதுபோன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பங்கும் முக்கியமாக திகழ்கிறது. புலம்பெயர் தொழிலாளர்களில் சிலர் குற்றம் செய்யக்கூடியவர்கள் இருக்கும் நிலையில், சில நல்லவர்களும் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதள பக்கத்தில் சிலர் தங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள், நல்லவைகளை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் புவனா கோபாலன் என்ற ஆசிரியர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் தனக்கு வட மாநிலத்தை சேர்ந்தவர் செய்த உதவியை நினைவு கூர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்த தம்பி நசிப் .வடமாநிலத்தை சேர்ந்தவர். இரண்டு மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து வரும்போது பேருந்து நிறுத்தத்தில் என்னுடைய பர்ஸை தவற விட்டுவிட்டேன். அதை நான் உணர்ந்திருக்கவும் இல்லை. அதில் 4000 சொச்சம் பணம் இருந்தது. நமக்கு அவசியமான ஆறாம்விரல் தான் கையில இருந்துச்சே, கிண்டியில ஏறினேன்.
தாம்பரம் வரும்போது ஒரு அழைப்பு. வழக்கமான இந்தியும், தமிழும் கலந்த குரலில் என் பெயரை கூறி நான் இருக்கிறேனா என்று கேட்டது. எனக்கு உடனே கார்டு மேலே இருக்குற சிஸ்ஷ்ட்டின் டிஜ்ட் நம்பர் ஷொல்லு என்பது போலவே கேட்க தொடங்கியது. ஹிந்தி புரியுமென்றாலும் என் பெயர், பர்ஸ் என்றவுடன் குழப்பமாக இருந்தது (நமக்குத்தான் பர்ஸ் இல்லன்றதே தெரியலையே ) மாட்டினியா என்று நினைத்தவாறே எனக்கு தெரிந்த இந்தியில் க்யா நேம், கிஸ்கா பர்ஸ், தும்கொ மேரா நம்பர் கைஸே மாலும் என்று துருவி துருவி கேட்கிறேன்.
உஸ்னே கஹா, ச்சே அந்த தம்பி (போதும்மா இந்திய கொல்லாதே என நினைச்சிருக்கலாம் ) வெயிட் கரோ என்று சொல்லி போட்டோ எடுத்து எனக்கு அனுப்பிட்டு அருகில் உள்ள தமிழ் பையனை அழைத்து வந்து பேச வைத்தார். அதில் உள்ள ரசீதில் என்னுடைய அலைபேசி எண் இருந்தது போல, அதை வைத்து அழைத்திருக்கிறார் .
இதற்குள் தாம்பரம் தாண்டி விட நீயே வெச்சுக்க தம்பி, நான் நாளை காலை என் அம்மாவை வந்து வாங்கிக்க சொல்றேன்னு சொல்லிட்டேன், நம்பிக்கை தானே வாழ்க்கை. மறுநாள் என் அம்மாவிற்கு அவரின் நம்பரை அனுப்பி உறவினர் மூலமாக பெற்றுக்கொண்டேன். ஏதேனும் பணம் தந்து அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நிச்சயம் மற்றொரு முறை செல்லும்போது ஒரு சட்டை எடுத்து கொடுத்துவிட்டு வரணும்.
அப்பா இதய நோயாளி. படிக்க வசதி இல்லாம 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படிச்சிருக்கார். குழந்தை தொழிலாளியாக வேலை செய்திருக்கார். இப்போ இங்க வந்து வேலை செய்கிறார், மாதம் 5000 சம்பளம் அதிகம் கிடைக்கும் என்பதால். வேறு என்ன சொல்ல !!!" என்று குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படத்துடன் கூடிய இந்த பதிவில், அந்த இளைஞரிடம் இவர் "எனது பெற்றோர் பணத்தை கொடுக்கும்போது ஏன் வாங்கவில்லை" என்று கேட்க, அவரோ "பணம் எல்லாம் இல்லை (MONEY IS NOT EVERYTHING)" என்று பதிலளித்துள்ளார். மேலும் "யாருக்கும் உதவி செய்தால் அவர்களிடம் இருந்து பணம் பெறக்கூடாது என்று எனது பெற்றோர் எனக்கு கூறியுள்ளனர்" என்றுள்ளார்.
இவரது பதிவுக்கு "வடமாநிலத்தவர் என்றாலே ஏமாற்றுபவர் என்ற மனநிலையை உங்களின் இந்த பதிவு மாற்றிவிட்டது." என்றும், "அன்பு, நம்பிக்கை" என்றும் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மற்ற ஒருவர், "தனது காணாமல் போன மொபைல் போனை தன்னிடம் திரும்ப ஒப்படைத்த வட மாநில தம்பிகள்" என்று அந்த கமெண்டில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பாஜகவினர் பச்சை பொய்யை பரப்பி வரும் நிலையில், "தமிழ்நாடு மக்கள் நல்லவர்கள், அன்பானவர்கள்" என்று ஆளுநர் சொன்னது போல தற்போது இணையவாசிகள் வட மாநிலத்தவர் தங்களுக்கு எதிரிகள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் அவர்கள் செய்த நல்லவற்றை பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.