பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என சிங்கப்பூரை சேர்ந்த அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக சிங்கப்பூரை சேர்ந்த அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் நிறுவனம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக அந்த நிறுவனம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் இந்திய நீதிமன்றத்தில் தான் இந்த வழக்கு தொடர முடியும் என்பதால் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றதத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து, சிங்கப்பூர் நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தது. இந்தமேல்முறையீடு வவழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அந்த நிறுவனத்தின் தரப்பில், சிங்கப்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், முதன்மை நிறுவனம் சிங்கப்பூரில் அமைந்துள்ளதால், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் எந்த தவறுமில்லை எனவும் வாதிடப்பட்டது.
அதேசமயம், சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் சிங்கப்பூரில் முதன்மை நிறுவனம் அமைந்திருந்தாலும், சென்னையில் துணை நிறுவனம் உள்ளது எனவும், நிறுவனத்தின் அதிகாரிகள் சென்னையில் தான் உள்ளனர் என்பதால் இந்தியாவில் தான் வழக்கு தொடர முடியும் எனவும் வாதிட்டார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்வதற்காக விசாரணையை மார்ச் 23ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.