தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (23.02.2023) சென்னையில் நடைபெற்ற வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- சென்னையின் முகங்களுள் ஒன்றாக இருக்கக்கூடிய வித்யோதயா பள்ளியினுடைய நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு, உங்களைச் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாக, மற்ற விழாக்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்கின்ற நேரத்தில் எந்த உணர்வைப் பெறுவேனோ, அதிலும் குறிப்பாக, பள்ளி விழாக்களில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்கிறபோது, நான் அதிகமான உற்சாகத்தை பெறுவதுண்டு. அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், கள்ளம் கபடம் இல்லாத பள்ளிக் குழந்தைகளின் முகத்தைக் காண்பதில் இருக்கக்கூடிய உற்சாகத்தை பார்க்கிறபோது அதைவிட வேறு மகிழ்ச்சி வேறு எதுவும் இருந்துவிட முடியாது. குழந்தைகளின் முகத்தில் காணக்கூடிய புன்னகைக்கு இணையானது எதுவுமே கிடையாது. மழலை மொழிக்கு இணையானதும் எதுவும் இல்லை.
குழல் இனிது - யாழ் இனிது என்று சொல்வார்கள், மழலையரின் சொற்களைக் கேளாதவர் என்று திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். அந்தளவுக்கு இனிமையானவை குழந்தைகளின் குரல்கள். குழந்தைகளின் முகங்கள்.
அதே போன்ற உணர்வோடுதான் இந்த பள்ளிக்குள் நுழைகிறபோது நானும் பெற்றேன் என்பதை இங்கே நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வித்யோதயா பள்ளி என்பது சென்னையில் மிக மிக முக்கியமான பள்ளி மட்டுமல்ல, இது ஒரு பாரம்பரியமான பள்ளி. நூற்றாண்டு விழா காணக்கூடிய அளவிற்கு ஒரு பாரம்பரியமான பள்ளியாக இது அமைந்திருக்கிறது.
சென்னையில் எத்தனையோ பள்ளிகள் இருக்கலாம், ஆனால் நூற்றாண்டு காணக்கூடிய பள்ளிகளை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குதான் நாம் பார்க்கமுடியும். அப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் நூற்றாண்டு விழாவைக் காணக்கூடிய இந்த வித்யோதயா பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெறுகிறபோது நான் கலந்துகொள்வதில் எண்ணற்ற மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்.
இந்தப் பள்ளி 1924-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆண்டுக்கு இன்னொரு முக்கியமான பெருமை உண்டு. அது என்னவென்று கேட்டீர்கள் என்றால், அதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஆண்டு. தலைவர் கலைஞர் அவர்களை பொறுத்தவரைக்கும், பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்துவிட்டு, அவருக்கு அந்த நேரத்தில் ஏற்பட்ட அரசியல் ஈடுபாட்டின் காரணமாக உயர் கல்விக்கு அவர் செல்லவில்லை, போக முடியவில்லை.
கல்லூரியைக் காணாத கலைஞர் அவர்கள், ஆனால், எத்தனையோ கல்லூரிகளை, எத்தனையோ பல்கலைக்கழகங்களை இந்த தமிழகத்தில் அவர் உருவாக்கியிருக்கிறார். இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கக்கூடிய ஒரு சிற்பியாக அவர் விளங்கியவர். அவர் பிறந்த ஆண்டில்தான் இந்தப் பள்ளி உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளியானது, இன்றைக்கு இந்த 100 ஆண்டை கண்டு இதில் பல்லாயிரக்கணக்கான மாணவச் செல்வங்களை இந்த பள்ளியிலே உருவாக்கி, இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம்.
இங்கு படித்தவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ பேரை அவர்களும் உருவாக்கி இருப்பார்கள். அந்த வகையில் மாபெரும் அறிவுச் சுரங்கமாக வித்யோதயா பள்ளி இயங்கிக் கொண்டிருப்பது என்பது பெருமைக்குரிய ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது!
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, விடுதலை அடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணல் காந்தி அடிகள் கனவு கண்டார்கள். அது அனைவருக்கும் பொதுவான நாடாக இருக்கவேண்டும். சாதி, மத வேற்றுமைகள் இருக்கக் கூடாது. இந்தியர்கள் அனைவரும் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும். கதர் கிராமத் தொழில்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்று அவர் நினைத்தார்.
தன்னைப் போலவே தனது சீடர்களும் இதில் ஆர்வம் கொண்டவர்களாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இப்படி வலியுறுத்திய காரணத்தால், அரசியல் எல்லைகளைக் கடந்து, காந்தியடிகளுக்கு ஏராளமான சீடர்கள் உருவானார்கள்.
தமிழ்நாட்டில் அதிமான சீடர்கள் உருவானார்கள். தன்னுடைய வாழ்நாளில் 22 முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றவர்தான் அண்ணல் மகாத்மா காந்தி. அவரது சீடர்களில் ஒருவரான இ.எஸ்.அப்பாசாமி என்ற எலிசபெத் சொர்ணம் அப்பாசாமி அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த வித்யோதயா பள்ளி!
காந்திய இயக்கத்தின் புகழ்பெற்ற ஆளுமைகளில் ஒருவரான ஜே.சி.குமரப்பாவின் அக்காதான் இ.எஸ்.அப்பாசாமி. அந்தக் காலத்தில் பள்ளிகள் மிக மிகக் குறைவு. மக்களுக்கு படிப்பில் இருந்த ஆர்வமும் குறைவு. 1920-ஆம் ஆண்டு நீதிக்கட்சிக் காலத்தில் பள்ளிக்கூடங்கள் அதிகம் திறக்கப்பட்டன.
அப்போது சட்டமன்றத்தினுடைய மேலவை உறுப்பினாராக இருந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அவரும், இ.எஸ்.அப்பாசாமியும் நண்பர்களாக விளங்கினார்கள். பெண்களுக்காகத் தனியாக ஒரு பள்ளியைத் தொடங்கப் போகிறேன் என்று இ.எஸ். அப்பாசாமி அம்மையார் அவர்கள் சொல்ல, முத்துலட்சுமி ரெட்டி மற்றும் அம்மு சுவாமிநாதன் போன்றவர்கள் நன்கொடைகளை திரட்டிக் கொடுத்து, தொடங்கப்பட்டதுதான் இந்தப் பள்ளி.
இந்தப் பள்ளியினுடைய முதல் மாணவி, இ.எஸ்.அப்பாசாமியின் மகளான விமலா அவர்கள். பெண்களை படிக்க வெளியில் அனுப்பக் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்த அந்த காலத்தில் பெண்களுக்காக தனியாகப் பள்ளியைத் தொடங்கி பெரும் புரட்சியின் அடையாளத்தை உருவாக்கியது வித்யோதயா பள்ளி!
அந்தப் பழமைவாதக் கருத்துகளை மீண்டும் சமூகத்தில் விதைக்க சிலர் நினைக்கிறார்கள். ஆம், அப்படிப்பட்டவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களை வீட்டிற்குள்ளேயே முடக்கவேண்டும்; போராடி உரிமைகளைப் பெற்ற ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து அந்த உரிமைகளைத் திரும்பப் பறிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அவர்களுடைய இந்த பிழைப்புவாத கருத்துகளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு, நீங்கள் நன்றாக படியுங்கள். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், 'கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து!'. அந்தக் கல்விச் சொத்தை நீங்கள் அடையக் கூடாது என்று திட்டம் போடுபவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறக் கூடாது! நிச்சயம் நிறைவேறாது!
சேவை மற்றும் தியாகம் என்பதை இலட்சியமாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் இந்தப் பள்ளி. அதே நோக்கம் கொண்ட மாணவக் கண்மணிகளை உருவாக்கியிருக்கிறீர்கள். தொடர்ந்து உருவாக்கிவிட்டு வருகிறீர்கள். அந்தக் காலத்தில், காலையில் அசெம்பிளி முடிந்ததும் பத்து நிமிடம் பொதுவான செய்திகளைப் பற்றி ஆசிரியர்கள் பேசுவார்கள்.
பாடத்திட்டத்தைத் தாண்டிய அறிவைப் போதிக்கக்கூடிய களமாக அது அமைந்திருந்தது. அதை உங்கள் பள்ளியில் 1970-ஆம் ஆண்டு படித்த மாணவி ஒருவர் சொல்லி இருக்கிறார். இதுபோன்ற முறைகள்தான் பட்டம் வாங்குபவர்களாக மட்டுமல்ல, அறிவாற்றல் கொண்டவர்களாகவும் வித்யோதயா பள்ளி மாணவிகளை உயர்த்தி இருக்கிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அனைவருக்கும் கல்வி வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நிச்சயமாக கல்வி வேண்டும். அதேபோல், அது மதிப்பெண் கல்வியாக இல்லாமல் பெண்ணின் மதிப்பை உயர்த்தக்கூடிய கல்வியாக அது அமைய வேண்டும். அத்தகைய கல்வியை உருவாக்கித் தரக்கூடிய பள்ளியாக இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது.
இத்தனை ஆண்டு காலம் நீடித்து நிலைப்பதற்கு உண்மையான காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும். இத்தகைய சேவை மற்றும் தியாக மனப்பான்மை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வந்தாக வேண்டும்.
தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளிக் கல்வித் துறை இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர் எழிலன் அவர்கள் பெருமையோடு பட்டியல் போட்டு எடுத்துச் சொன்னார்.
Ø இல்லம் தேடிக் கல்வி
Ø நான் முதல்வன்
Ø பள்ளி மேலாண்மைக் குழுக்கள்
Ø பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி
Ø சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி
Ø 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்
Ø பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்
Ø 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள்
Ø மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி
Ø கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி
Ø உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
Ø வகுப்பறை உற்று நோக்கு செயலி
Ø மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி - ஆகிய திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயல்படுத்தி வருகிறோம்.
இது அரசுப் பள்ளிகளுக்கும் மட்டுமல்ல, அனைத்துப் பள்ளிகளுக்குமானது. இதுபோன்ற புதிய புதிய செயல்திட்டங்களை ஆர்வத்துடன் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
இதில் “நான் முதல்வன்” என்ற திட்டம் தமிழ்நாட்டு மாணவ மாணவியரை அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக வளர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திருக்கிறது. இதனுடைய பயன் என்பது ஓராண்டில் - ஐந்தாண்டில் முடிவடைவடையக் கூடியதல்ல. தலைமுறை தலைமுறைக்கு அவர்களுக்கு நம் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பயன்படக்கூடிய திட்டமாக அது அமைந்திருக்கிறது.
100 விழுக்காடு படிப்பறிவு, பள்ளிப் படிப்பறிவு, கல்லூரிப் படிப்பு என்பதை நாம் நிச்சயமாக எட்டியாக வேண்டும். அனைவருக்கும் கல்வியைக் கொடுத்தாக வேண்டும். இடையில் நின்றுவிடும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வர முயற்சிக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக கற்றல் குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். பெண் குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். பள்ளியோடு கல்வியை நிறுத்திவிடாமல் கல்லூரிகளுக்கும் அவர்கள் செல்ல வேண்டும்.
கல்விக்குத் தகுந்த வேலைகளில் சேர வேண்டும். திருமணத்திற்குப் பிறகு பல்வேறு நிலைகளில் தங்களது திறமைக்கு ஏற்ற பணிகளில் அவர்கள் இயங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதுதான் உங்களை உருவாக்கிய இந்தப் பள்ளிக்கு பெருமையை சேர்த்திட முடியும்! பள்ளிக்கு மட்டுமல்ல, இந்த மாநிலத்திற்கும் பெருமை கிடைக்கும்!
எனவே, இந்தக் கல்வி நிறுவனத்தை உருவாக்கிய எலிசபெத் சொர்ணம் அப்பாசாமி அம்மையாருக்கும் அதில் நிச்சயமாக பெருமையாக இது அமைந்திடமுடியும்!
உங்களது சேவையும் தியாகமும் எந்நாளும் தொடரட்டும் என்று நூற்றாண்டு விழாக் காணக்கூடிய இந்த நேரத்தில் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.