பொதுவாக சிறு சிறு பூச்சிகள் வீட்டில் அடிக்கடி உலாவி வரும். அதிலும் விஷத்தன்மையுடன் இருக்கும் உயிரினங்கள் அவ்வப்போது வீட்டிலுள்ள எதாவது ஒரு பொருளில் மறைந்திருக்கும். குறிப்பாக சிறு குழந்தையின் ஷூவில் தேள் இருந்தது, கழிவறையில் பாம்பு இருந்தது என பல செய்திகளையும் நாம் கேட்டிருப்போம். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வெளிச்செம்மண்டலம் என்ற பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுகிழமை) வழக்கம்போல் இவர் சமயலறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே 'உஷ்..' என்று சத்தம் வந்துள்ளது. இதனால் மதி அங்கே இங்கே சுற்றி சுற்றி தேடி பார்த்துள்ளார். இருப்பினும் அந்த சத்தம் எங்கிருந்து வருவது என்று அவருக்கு தெரியவரவில்லை.
தொடர்ந்து அவர் சிலிண்டரை நகர்த்தி பார்க்கவே அங்கே நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது தெரியவந்தது. இதனை கண்டதும் ஆடிப்போன மதியழகன், உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து கடலூர் பாம்பு ஆர்வலர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், சிலிண்டரை குப்புற போட்டு பார்த்துள்ளார். அதில் பாம்பு தான் இருக்கும் இடம் தெரியாமல் மறைவாக இருந்துள்ளது.
தொடர்ந்து அவர் அதனை வெளியே எடுக்க முயன்றபோது, தனது தலையை தூக்கி படமெடுத்தது. இதனை கண்டதும் பாம்பு ஆர்வலர் உடனிருந்த மதி, அவரது உறவினர்கள் என அனைவரும் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து அந்த பாம்பை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார் அந்த பாம்பு ஆர்வலர். தொடர்ந்து அதனை தான் கொண்டு வந்த கண்ணாடி குடுவைக்குள் போட்டு அடைத்தார்.
சமயலறையில் உள்ள சிலிண்டருக்கு அடியில் நல்ல பாம்பு இருந்துள்ள சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதே போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது. கழிவறையில் பாம்பு இருப்பது; ஷூவில் விஷ பூச்சி இருப்பது; ஸ்கூல் பையில் தவளை கிடப்பது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளது. எனவே மக்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
முன்னதாக இதே போன்று கடந்த 2016-ம் ஆண்டு சிலிண்டருக்கு அடியில் பாம்பு இருந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. முதலில் கேஸ் தான் வெளியேறுகிறதா என்று பதறிய குடும்பத்தாருக்கு, சிலிண்டருக்கு அடியில் பாம்பு இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.