முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் " தமிழ்நாடு 360 டிஜிட்டல் தகவல் பலகை" கண்காணிப்பால் மாநிலத்தின் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு கிடைப்பதாகவும் இந்தியா டுடே ஆங்கில இதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே ஆங்கில இதழில் அதன் துணை ஆசிரியர் Amarnath K Menon எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில், (Gfx in) தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாள்தோறும் உழைத்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி அனைத்து தரப்பு வரவேற்பையும் பெற்று வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள தமது அறையில் தமிழ்நாடு 360 டிஜிட்டல் தகவல் பலகையை அமைத்து, அதன்மூலம் அரசின் திட்டங்கள், அதன் நிலை மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்காணித்து வருவதாகவும், திட்டங்களில் தொய்வு ஏற்பட்டால் அதுகுறித்து உடனடியாக அதிகாரிகளிடம் அறிவுறுத்தி பணிகளை வேகமெடுக்க செய்கிறார் என்றும் இந்தியா டுடே பாராட்டு தெரிவித்துள்ளது.
தமது அறை மட்டுமின்றி, அரசின் 38 துறைகளிலும், 220 இயக்குனரகங்களிலும் தகவல் பலகைகளை வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதற்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு துறையும் தனது துறைகளின் பணிகள், செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை நாள்தோறும் அறிந்து கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் பலகை மூலம், அணைகளின் நீர் இருப்பு, மழையளவு, குடிநீர் விநியோகம், உணவுப்பொருட்களின் விலை நிலவரங்கள், வேலைவாய்ப்புகள், நியாயவிலைக்கடைகளின் செயல்பாடுகள், அங்குள்ள பொருட்களின் இருப்பு, காவல்துறையின் செயல்பாடுகள், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்டவற்றை முதலமைச்சர் கண்காணித்து வருவதாகவும், இதன்மூலம் ஒவ்வொரு துறையும் பொறுப்புடனும், சிறப்புடனும் செயல்பட்டு வருவதாக இந்தியா டுடே பாராட்டு தெரிவித்துள்ளது.
இதேபோன்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதிகள் உள்ளிட்டவற்றை அவ்வபோது கண்காணித்து வருவதால் மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நிர்வாகம் நடைபெற்று வருவதாக இந்தியா டுடே ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால், அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த வளர்ச்சியை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனுக்குடன் அறிந்து அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை, காவல்துறை, மின்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சீர்த்திருத்தம் செய்யப்பட்டுள்ளதையும் இந்தியா டுடே இதழ் சுட்டிக் காட்டியுள்ளது, ஒட்டுமொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் அனைத்து துறைகளும் வீறுநடை போட்டு வருவதாகவும், தமிழ்நாடு வேகமான வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் இந்தியா டுடே புகழாரம் சூட்டியுள்ளது.