தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத் துறை தேவையில்லை என்பது எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும்" என்று அண்ணாமலை பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பழமை வாய்ந்த நாகராஜா கோயில் தைப்பெரும் திருவிழாவையொட்டி இன்று கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "பா.ஜ.க மீது எந்த தவறும் இல்லை என்றால் ஏன் பி.பி.சி ஆவணப்படத்தைத் தடை செய்ய வேண்டும்?. பா.ஜ.க-வுக்கு குற்ற உணர்ச்சி இருப்பதால்தான் ஆவணப்படத்திற்கு பா.ஜ.க- தடை விதித்துள்ளார்கள். தவறு எதுவும் இல்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஏக்கர் அறநிலையத்துறை நிலங்கள் தனியார் வசம் இருந்தது. இதைத் தமிழ்நாடு அரசு மீட்டுள்ளது. இதை பா.ஜ.க-வால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு அரசு பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் அன்னதானம் போன்ற பணிகளைச் செய்து வருவது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஆட்சியாளர்கள் அறநிலையத்துறையைப் புறக்கணித்த நிலையில் தி.மு.க அரசு தற்போது சிறப்பாக செயல்படுத்தி காட்டி வருகிறது. இவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான்
பா.ஜ.க-வினர் அறநிலையத்துறை குறித்து தவறான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் கோயில்கள் அறநிலையத்துறையின் கீழ்தான் உள்ளது. அந்த மாநிலங்களில் அறநிலையத்துறை வெளியேற்ற முடியுமா?.. தமிழ்நாட்டில் இருக்கும் அண்ணாமலை போன்ற பா.ஜ.க-வினர் வெற்றுப் பேச்சு பேசி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.