இந்தி மொழி திணிப்பிற்கு எதிராகத் தமிழ்நாட்டில் 1960ம் ஆண்டும் இளைஞர்கள் எழுச்சி மிகுந்த போராட்டங்களை நடத்தினர். அப்போது நடராசன், தாளமுத்து, சின்னசாமி, சிவலிங்கம், அரங்கநாதன், முத்து, இராசேந்திரன், வீரப்பன், சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, முத்து போன்ற பல இளைஞர்கள் தமிழ்மொழிக்காக தனது இன்னுயிரையும் கொடுத்தனர்.
இவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில், மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து திருவள்ளூரில் மாலை நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " வீழ்ச்சியுற்று கிடந்த தமிழினம் பகுத்தறிவுக் கருத்துகளால் இன - மான - மொழி உணர்ச்சி பெற்று, வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவுகூரும் நாள்தான் இந்த வீரவணக்க நாள்.
ஆங்கிலேய ஆட்சியின் பிடியிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இந்தி ஆதிக்கத்தை நிறுவமுயன்றவர்களை எதிர்த்து தமிழ் காக்க தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து உயிரையும் விலையாய் கொடுத்த வீர மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் இந்த நாள்!
தமிழ்நாடு இதுவரையில் பல்வேறு மொழிப்போர் களங்களைச் சந்தித்திருக்கிறது. 1938 முதல் 1940 வரை முதல் களம். 1948 முதல் 1950 வரை இரண்டாவது களம். 1953 முதல் 1956 வரை, மூன்றாவது களம். 1959 முதல் 1965 வரை நான்காவது களம். 1986 ஐந்தாவது களம். இந்த தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது, நம்முடைய தமிழினம் மீண்டும் தாழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்!
"இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!- செந்தமிழுக்குத் தீமை வந்த பின்னும் இந்தத் தேகம் இருந்தொரு லாபம் உண்டோ?" என்று 1938-இல் பாவேந்தர் பாரதிதாசன் முழங்கினார்.
தந்தை பெரியார் - மறைமலை அடிகள் - நாவலர் சோமசுந்தர பாரதியார் - துறவி அருணகிரி அடிகள், பேரறிஞர் அண்ணா என தமிழ் உணர்வாளர்கள் பலரும் எழுதியும் பேசியும்இந்தித் திணிப்பின் ஆபத்துகளை மக்களிடையே விளக்கினர்.
இதையெல்லாம் உள்வாங்கி, 'இருப்பது ஓர் உயிர் அது போகப் போவது ஒருமுறை, அது நல்ல காரியத்துக்காக நாட்டுக்காகப் போகட்டுமே' என்று வாழ்ந்து- தமிழுக்காக உயிர் நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள்!
1938-ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்துல கைதாகி 1939-இல்சிறையில் மறைந்த நடராசனும் தாளமுத்துவும்- 1965-ஆம் ஆண்டு- தூக்கி நின்ற துப்பாக்கிக் குண்டுக்கு- மார்பு காட்டி நின்ற அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் படையில் சிவகங்கை இராசேந்திரனும்- 1965 மற்றும் 1966-ஆம் ஆண்டுகளில் தங்களது தேக்குமர தேகத்தை தீயால் எரித்துக் கொண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, ‘மாணவமணி’ மயிலாடுதுறை சாரங்கபாணி போன்றோரும் - அமுது அருந்துவது போல விஷம் அருந்தி மறைந்தகோவை பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் - இன்றைக்கும் படங்களாக இருந்து உணர்வுகளில் நிறைந்து நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தத் தியாகிகளைப் போற்றுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் நாளை மொழிப்போர் தியாகிகள் நாளாகக் கடைப்பிடிக்கிறோம்!" இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.