தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவிக்கு வந்ததில் இருந்தே மாநில அரசுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதோடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ஆளுநர்.
அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். அண்மையில் கூட தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதுதான் சரியானது என பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இதோடு நின்று விடாத ஆளுநர் கடந்த ஜனவரி 9ம் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை வேண்டும் என்றே தவிர்த்து உரையாற்றினார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் ஆளுநர் இருக்கும்போதே, அரசு தயாரித்த அறிக்கை மட்டுமே பேரவையில் இடம்பெறும் என்று தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். இதனால் ஆளுநர் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னரே வெளிநடப்பு செய்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. மேலும் ட்விட்டரில் #GetOutRavi, என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது.
பின்னர் அடுத்த நாளை நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட பொங்கல் விழா அழைப்பில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து மீண்டும் தமிழக ஆளுநர் என இருந்தது. அதேபோல் தமிழ்நாடு அரசின் இலட்சினைக்கு பதில் ஒன்றிய அரசின் லட்சினை இடம் பெற்றது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தமிழ்நாடு அரசின் இலச்சினை மற்றும் தமிழ்நாடு என்ற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது. மேலும், விழாவில் பேசிய ஆளுநர் ஆர் என் ரவியும் தமிழ்நாடு என்றே குறிப்பிட்டுப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.