தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவிக்கு வந்ததில் இருந்தே மாநில அரசுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அதோடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ஆளுநர்.
அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். அண்மையில் கூட தமிழ்நாட்டைத் தமிழகம் என்று அழைப்பதுதான் சரியானது என பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
இதோடு நின்று விடாத ஆளுநர் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை வேண்டும் என்றே தவிர்த்து வாதித்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. மேலும் ட்விட்டரில் #GetOutRavi, என்ற ஹேஷ்டாகு இப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் GetOutRavi என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு ஆளுநருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. . அதேபோல் தமிழ்நாட்டை விட்டு ஆளுநர் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவடியில் உள்ள இந்து கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டு ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள அரசு கலைகல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு, வாழ்க தமிழ், பெரியா, அம்பேத்கார், அண்ணா என முழக்கமிட்டு வருகின்றனர். இப்படி தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.