தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள படுக்கப் பத்து கிராமத்தை சேர்ந்தவர் சுடலை ராஜ். இவர் குலசேகரப்பட்டத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது வங்கியில் நகைகடன் பெற வரும் வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை அவர்கள் கேட்கும் கடன்தொகையை விட, அதிகமான தொகைக்கு அடமான வைத்தும், வங்கியில் அடமானமாக வைக்கப்பட்ட தங்க நகைகளை நகை உரிமையாளர்களுக்கு தெரியாமல், வங்கி அடமான அட்டையில் வங்கி மேலாளரின் கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு நகைகளை திருப்பி உள்ளார்.
இந்த நகைகளை அவரது நண்பர்களான குமாரவேல், ராம்குமார், மற்றும் ரமேஷ் ஆகியோரின் பெயரில் அதிக தொகைக்கு அடமானம் வைத்துள்ளார். அவரின் பேரில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் சிலவற்றை வங்கியில் இருந்து திருப்பி அதனை வைத்துக்கொண்டு ரூபாய் 9.8 லட்சம் பணம் மற்றும் 55 பவுன் தங்க நகைகளையும் மோசடி செய்து உள்ளார்.
இது குறித்து வங்கியின் கிளை மேலாளர் சங்கர சுப்பிரமணியன் கடந்த 9.9.2022 ஆம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில், மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சுடலை என்ற சுடலை ராஜ், ரமேஷ், குமாரவேல், ராம்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.