சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான அடிப்பாலாறு பகுதியில் உள்ள காவிரி நீர் தேக்கத்தில் நான்கு சடலங்கள் மிதப்பதாக கொளத்தூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது 2 பெண் குழந்தைகள் உடல் மற்றும் ஒரு ஆண், பெண் உடல் இருந்துள்ளது. மேலும் அருகே இரு இருசக்கர வாகனம் இருந்தது.
பின்னர் போலிஸார் அந்த இரு சக்கர வாகனத்தை ஆய்வு செய்தபோது அதில் ஒரு தொலைபேசி எண் இருந்துள்ளது. இதனை அடுத்து தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனி பகுதி சேர்ந்தவர் யுவராஜ், அவரது மனைவி பான்விழி, மகள்கள் நேகா, அக்சரா என்பது தெரிய வந்தது.
மேலும் யுவராஜின் மூத்த மகளுக்கு கடந்த மூன்று வருட காலமாக நீரழிவு நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவரது இளைய மகளுக்கும் நேற்று முன்தினம் பரிசோதனை செய்ததில் நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த யுவராஜ், பான்விழி தம்பதிகள் தனது இரண்டு மகள்களையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மேட்டூர் அருகே உள்ள தமிழ்நாடு - கர்நாடக எல்லையான அடிப்பாளாறு காவிரி ஆற்றில் தனது 2 மகள்களையும் வீசி கொலை செய்துவிட்டு தம்பதிகள் இருவரும் அதே ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
நீரிழிவு நோயால் பாதித்த 2 மகள்களின் பரிதாப நிலையை பார்க்க முடியாமல் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”