திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேலச்செங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் சினிமா துறையில் கேமராமேன் உதவியாளராக பணியாற்றி வந்தார். மேலும் வடபழனியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் 2 மாதங்களாக நண்பர்களுடன் இணைந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு நண்பர்கள் வீட்டிற்கு வந்த போது, அறையின் கதவு பூட்டப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்த போது ராஜீவ் காந்தி மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இது குறித்துத் தகவலறிந்து அங்கு வந்த வடபழனி போலிஸார் ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் சோதனையிட்ட போது இறப்பதற்கு முன் ராஜீவ் காந்தி எழுதிய கடிதம் ஒன்றை போலிஸார் கண்டுபிடித்தனர்.
அதில்,"தனது சாவுக்கு யாரும் காரணமில்லை. காதல் தோல்வியால் மன உளைச்சல் ஏற்பட்டு குடிபோதைக்கு அடிமையாகியதால் தற்கொலை செய்து கொள்வதாக" இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ராஜீவ் காந்தி பல வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். பிறகு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துள்ளனர். இந்த காதல் தோல்வியால் சில நாட்களாகவே ராஜீவ் காந்தி மன உளைச்சலில் இருந்து வந்ததும்விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.