வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. இந்த புயல் புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டவிற்கு இடையே நேற்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து மாண்டஸ் புயல் நேற்று இரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது. பின்னர் அதிகாலை சுமார் 3 மணி அளவில் முழுமையாகக் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. மேலும் புயல் கரையைக் கடக்கும்போது 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது.
இந்த புயல் கரையை கடக்கும்போது கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசு புயல் சென்னை அருகே கடக்கும் என வானிலை மையம் கூறிய நாளிலிருந்தே புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டது.
குறிப்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனு தலைமைச் செயலாளர் இறையன்பு இரண்டு முறை ஆலோசனை நடத்தினார். மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
மேலும் புயல் கரையை கடந்த உடன் சாலையில் விழுந்த மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அறுந்து விழுந்த மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்புகள் கொடுக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் புயல் காரணமாக எந்த பகுதியிலும் போக்குவரத்தும் தடைபடாமல் வழக்கம்போல் இயங்கி வருகிறது.
நேற்று இரவிலிருந்தே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து விரைந்து செயல்பட்டதாலே இது சாத்தியமாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தற்போது புயல் வந்த தடமே தெரியாத அளவிற்குக் கடலோர மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இதனால் தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்தான் புயலால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என தி.மு.க அரசை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமாஸ் தமிழ்நாடு அரசை பாராட்டியுள்ளார்.
இது குறித்து அன்புமணி ராமாஸ் வெளியிட்டுள்ள டவிட்டர் பதிவில், "கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்." என தெரிவித்துள்ளார்.