காவல்துறையின் மூலம் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பரிசு கூப்பன் விழுந்திருப்பதாகவும் அதற்காக முன் பணம் செலுத்த வேண்டும் என கார்த்திகேயன் என்ற காவலருக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர் சிறிது சிறிதாக தனது கணக்கிலிருந்து குறுஞ்செய்தியில் குறிப்பிட்ட நபருக்கு பணத்தை அனுப்பி உள்ளார். அமேசான் மூலம் பல லட்சரூபாய் பரிசு பணம் அனுப்பி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது. சுமார் 7,25,000 வரை அவர் பணத்தை அனுப்பி, இரண்டு மாதங்கள் கழித்தும் பரிசு பணம் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளார்.
இதனை அடுத்து கார்த்திகேயன் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்படி, சைபர் கிரைம் தனிப்படை போலிஸார் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தபட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலிஸார் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். நைஜீரியன் ஸ்கேம் என அழைக்கப்படும் மோசடியில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரே பணத்தை இழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முரளி மற்றும் விநாயகுமார் ஆகிய இருவரை போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆதார் கார்டு, சிம் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, இதில் தொடர்புடைய மீதமுள்ள நபர்களையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலிஸார் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் இங்கு நடந்தது போன்ற ஒரே மாதிரியான மோசடி நடந்திருப்பதை அறிந்து, அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (32) மற்றும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி (40) ஆகியோர் பெங்களூருவில் இதேபோல் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் தனிப்படை போலிஸார் பெங்களூர் சென்று இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து செல்போன்கள் சிம் கார்டு மற்றும் ஏ.டி.எம் கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.