திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பகுதியை அடுத்துள்ளது நரசிங்கபுரம் என்ற கிராமம். இங்கு பிரேம்குமார் - பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு இடங்களில் கூலி செய்து வரும் நிலையில், இவர்களுக்கு 4 மற்றும் 1½ வயதில் கனிஷ்காஸ்ரீ, ஹர்ஷிதாஸ்ரீ என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் தேங்காய் கம்பெனியில் பவித்ரா கூலி வேலைக்கு சென்ற பவித்ரா, தன்னுடன் தனது இரண்டு பிள்ளைகளையும் கூட்டி சென்றார். அப்போது தனது குழந்தைகளை அருகே விளையாட விட்டுவிட்டு, சக ஊழியர்களுடன் பவித்ரா வேலை செய்து கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தேங்காய் கம்பெனியின் வளாகத்தில் திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள், எதிர்பாராத விதமாக விழுந்தது. தனது தங்கை நீருக்கு அருகே செல்வதை முதலில் கவனிக்காத 4 வயது சிறுமி - அவர் விழுந்ததும் தனது தாயிடம் ஓடி சென்று கூறினார்.
இதைக்கேட்டதும் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்த தாய் குழந்தையை தூக்கி முதலுதவி செய்தனர். ஆனால் குழந்தையிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லாமல் குழந்தை உயிரிழந்தது. இதையடுத்து கதறி அழுத தாயை அங்கிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து செம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினார்.
அதோடு இது குறித்து வழக்குப்பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நீருக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.