ராமநாதபுரம் மாவட்டம் பிரபுக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீதிராஜன் (வயது 28). டிப்ளமோ மெக்கானிக் படிப்பை முடிந்துள்ள இவர் நீண்ட நாள் வேலை இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். அப்போது இவருக்கு மகாதீர் முகமது என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் தனக்கு வேலை இல்லாதது குறித்து நீதிராஜன் கூறியுள்ளார்.
அப்போது கம்போடியா நாட்டில் கம்ப்யூட்டர் தொடர்பான வேலை ஒன்று இருப்பதாகவும், அங்கு நல்ல சம்பளம் வழங்கப்படும் என்றும் மகாதீர் முகமது கூறியுள்ளார். மேலும், விசா போன்ற செலவுகளுக்காக 2.50 லட்ச ரூபாய் செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை நம்பிய நீதிராஜன் மகாதீர் முகமது கேட்ட தொகையை அவரிடம் கொடுத்து வேலை வாங்கித்தரும்படி கூறியுள்ளார். சொன்னதுபோலவே நீதிராஜனை சுற்றுலா விசாவில் கம்போடியா அழைத்துச்சென்ற முகமது அங்கு ஒரு சீன நிறுவனத்திடம் நீதிராஜனை 3 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் 2லட்சம் )விற்பனை செய்துள்ளார்.
இதை அறியாத நீதிராஜன் தனக்கு கம்யூட்டர் வேலை வழங்கப்படும் என நினைத்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆண்களிடம் போனில் பெண் குரலில் பேசி அவர்களை மயக்கி பணம் செலுத்த வைக்கும் வேலையே செய்யுமாறு அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இந்த வேலை செய்ய மறுத்துள்ளார். இதனால் அவருக்கு உணவு வழங்காமல் உடலில் மின்சாரம் பாய்ச்சி அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சித்ரவதை செய்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி அந்த வேலைக்கு அவர் சம்மதித்துள்ளார்.
பின்னர் ஒருநாள் அங்கிருந்து தப்பி தூதரக உதவியோடு அவர் இந்தியா திரும்பியுள்ளார். இந்தியா திரும்பியவர் தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும்,தன்னை போல பலர் அங்கு சிக்கிக்கொண்டுள்ளதாகவும் ,அவர்களையும் மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.