நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தி.மு.க எம்.பி.க்கள் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு செய்து தரும்படி வலியுறுத்தினர். அதன்படி தி.மு.க மாநிலங்களவையில் எம்.பி பி.வில்சன் நாடு மழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப் பதிவின் போதே ஒருமுறை சிறிய அளவிலான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்திருந்தார்.
தி.மு.க மாநிலங்களவையில் எம்.பி பி.வில்சன் கோரிக்கைகள் பரிசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டும் இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது ஒன்றிய அமைச்சர் ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ஒன்றிய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி அளித்துள்ள பதில் கடிதத்தை தி.மு.க எம்.பி பி.வில்சன் தனது டிவிட்டரில் பதிவிட்டார்.
அந்தக் கடிதத்தில், ‘‘நாட்டின் பல பகுதிகளில் 60 கி.மீ தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளது அரசின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுகிறது. சில மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், பயணித்த தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கும் அத்தகைய தொழில்நுட்பம் மூலம், சுங்கச்சாவடிகளுக்கு இடையேயான தூரப் பிரச்னை தீரும். சோதனை முயற்சியைத் தொடர்ந்து எடுக்கப்படும். அதேபோல, சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் திருத்தி அமைக்கப்படும். அதன்படி, பொது நிதி உதவித்திட்டத்தில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.
சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக அமைச்சர் நிதின் கட்கரிக்கு எம்.பி வில்சன் நன்றி தெரிவித்து, இத்தகைய உத்தரவை விரைவில் ஆவணம் செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க மாநிலங்களவையில் எம்.பி வில்சன்நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.