மக்களிடையே ஏராளமான மூடநம்பிக்கைகள் பொதிந்து கிடக்கின்றன. அதிலும் சந்திர,சூரிய கிரகங்களின் போது குளிப்பது, சாப்பிடுவது, வெளியே வருவதில் பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. அதிலும் கிரகணங்களின்போது, கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்றும், இந்த நேரத்தில் சாப்பிடுவது கூடாது என்றும் பல ஆண்டுகளாக மக்களிடையே நம்பிக்கை உள்ளது.
இது போன்றநம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் என்று அறிவியல் அடித்துச்சொல்லிய நிலையிலும், பல ஆண்டுகள் நிலவிய மூடநம்பிக்கைகள் மக்களிடையே இன்னும் பரவி கிடக்கிறது. இது போன்ற மூடநம்பிக்கையை உடைக்கும் விதமாக திராவிடர் கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 25-ம் தேதி அன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில், திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் மூடநம்பிக்கை ஒழிப்பு சிற்றுண்டி உணவு விருந்து நடைபெற்றது. இதில் பல கர்ப்பிணி பெண்களும் கலந்துகொண்டு உச்சத்தில் தெரியும் நேரமான மாலை 5:30 மணிக்கு உணவருந்தினர்.
இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், சிலர் இந்த பெண்களுக்கு பிறகும் குழந்தைகள் உடல்நல குறைவோடு பிறக்கும் என கூறியிருந்தனர். இந்த நிலையில்,திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழிலரசி என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு நேற்று ஆரோக்கியமான முறையில் குழந்தை பிறந்துள்ளது.
இதன் மூலம் பல ஆண்டுகளாக நிலவிவந்த மூடநம்பிக்கை மீண்டும் ஒருமுறை பகிரங்கமாக முறியடிக்கப்பட்டுள்ளது. தாயும்,சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை பரப்பியது குறிப்பிடத்தக்கது.