திண்டுக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு விபுல்குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜ்குமார் தன் வீட்டின் அருகே உள்ள கிண்றில் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார்.
இதையடுத்து ராஜ்குமார், மகனின் இடுப்பில் சேலையைக் கட்டி கிணற்றில் இறக்கி நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார். அப்போது திடீரென விபுல்குமாரின் இடுப்பில் இருந்து சேலை அவிழ்ந்துள்ளது. இதனால் அவர் நீரில் மூழ்கியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உடனே கிணற்றில் குதித்து மகனைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு வர முயற்சித்துள்ளார். அனால் அவரது மகன் பயத்தில் ராஜ்குமாரின் கழுத்தைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்துள்ளார். இதனால் இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இதைக் கிணற்றின் மேல இருந்து பார்த்து பதறியடித்து ராஜ்குமாரின் மனைவி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கு வந்த மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய ராஜ்குமார், விபுல்குமாரை சடலமாக மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் கற்றுக்கொடுக்கும்போது தந்தை, மகன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.