கோவை கார் சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பா.ஜ.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடைவிதிக்க கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் காவல்துறை அனுமதி அவசியம் என்றும், ஆனால் இந்த போராட்டத்திற்கு அனுமதி வாங்கியதாக தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தரப்பில் இந்த பந்த் நடத்த மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை என்றும், கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதவும், பந்த் நடத்துவதா அல்லது வேறு என்ன வகையான போராட்டம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும், அதனை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் இடைக்கால உத்தரவு ஏதும் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.