தேனி மாவட்டம் பொம்மை கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர் ராஜா (வயது 30). கோவையில் மருந்துகள் விற்கும் பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் இவர், கடந்த மாதம் காவியா (வயது 22) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். புதுமண தம்பதியினரான இவர்கள் அவ்வப்போது விருந்து, சுற்றுலா என வெளியூர் சென்று வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு போடியில் உள்ள மாப்பிள்ளை அழகர் ராஜாவின் அக்கா வீட்டுக்கு புதுமண தம்பதியினர் விருந்துக்கு சென்றனர். அப்போது அங்கே 4 நாட்களுக்கு முன்பு அழகரின் அக்கா மகன் சஞ்சய் லண்டனில் இருந்து வந்திருந்தார். எனவே அழகர், சஞ்சய், காவியா ஆகிய மூவரும் வெளியே செல்ல விரும்பினர்.
அதன்படி நேற்று மூன்று பெரும் பெரியாற்று கோம்பை ஆற்றிற்கு குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால் கணவர் அழகர்ராஜா சூழலில் சிக்கிக் கொண்டார். அழகர் ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு மனைவி கவியாவும், சஞ்சயும் அவரை மீட்க முயன்றனர்.
ஆனால் நீர்வரத்து வேகமாக இருந்ததால் அழகரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மனைவி மற்றும் சஞ்சய் சுழலில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்றனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த மூவரும் சடலமாக கிடந்தனர்.
இதையடுத்து அவர்களின் சடலத்தை மீட்ட அதிகாரிகள், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருந்துக்கு சென்ற புதுமண தம்பதியினர் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.