அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பொட்டக்கொல்லை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 'மச்சான்ஸ் கறி' என்ற உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இது தொடங்கி தற்போது 2-வது ஆண்டு விழா கொண்டாடப்படுவதையொட்டி, உணவகம் சார்பில் போட்டி ஒன்று நடைபெற்றது.
அதில் தனி நபர் ஒருவர் 30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் அவருக்கு உணவகம் சார்பாக 100 ரூபாய் பரிசளிக்கப்படும். முடியாதவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான பணம் செலுத்த வேண்டும். இந்த போட்டி மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. பரோட்டாவை சாப்பிடும்போது போட்டி முடியும் வரை போட்டியாளர் வாந்தியெடுக்கக்கூடாது என சில விதிமுறைகளின் படி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், போட்டியாளர் சூர்யா என்பவர் 30 நிமிடங்களில் 10 பரோட்டாக்களை சாப்பிட்டு வெற்றிபெற்றார். இவருக்கு அந்த உணவகம் சார்பாக ரூ.100, மற்றும் சாப்பிட்ட பரோட்டாவுக்கு காசும் வாங்காமல் உணவகம் கெளரவித்தனர்.
திரைப்படப்பாணியில் கிராமப்புறத்தில் நடைபெற்ற இந்த விநோத போட்டியை அந்த பகுதி மக்கள் கலந்துகொண்டதோடு இதனை காண பார்வையாளர்களும் வந்தனர். 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் 50 பரோட்டா சாப்பிட்டு சூரி 'பரோட்டா சூரி'-யாக மாறியது போல், இங்கு சூர்யா 'பரோட்டா சூர்யா'-வாக மாறியதாக அப்பகுதி மக்கள் கலகலப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் தமிழ் மன்னன் கூறுகையில், "நாங்கள் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்றால் ஜெயங்கொண்டம் அல்லது அரியலூர் தான் செல்ல வேண்டும்.
இதனால் நான் சிங்கப்பூரில் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் இப்பகுதி மக்கள் பயன்படும் அளவில் ஒரு நல்ல ஹோட்டலை துவங்கி மக்களுக்கு பயன்படும் அளவுக்கு நடத்தி வருகிறேன்" என்றார்.