கடந்த 2019-ம் ஆண்டு சென்னை MGR நகரில் கடைக்கு தின்பண்டம் வாங்க சென்ற 11 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 64 வயதுடைய முதியவர் முருகன் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் உள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த தாய், இந்த சம்பவம் குறித்து முதியவர் மீது அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு முதியவர் முருகனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை சென்னை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் வந்து அடையாளமும் காட்டினார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி முருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு போக்சோ சட்டப் பிரிவில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.