பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா 3 நாள் சுற்றுப்பயணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து ஜே.பி நட்டா உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய ஜே.பி. நட்டா, "தி.மு.க வில் படித்த தலைவர்கள் யாருமே இல்லை. அதனால்தான் அவர்கள் நீட்டை எதிர்க்கிறார்கள்" என கூறியுள்ளார். கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர்களே என்ன தலைவர் இப்படிப் பொய் பேசுகிறார் என நினைக்கும் அளவிற்கு ஜே.பி. நட்டாவின் பேச்சு இருந்துள்ளது.
இதையடுத்து ஜே.பி. நட்டாவின் இந்த பேச்சுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஒரு வேலை பிரதமர் நரேந்திர மோடி படித்த ‘Entire Political Science’ படிப்பில் பட்டம் பெற்றிருந்தால் படித்தவர் என சொல்லியிருப்பார் என கிண்டல் அடித்து பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"2 நாடுகளில் மூன்று பல்கலைக்கழகங்களில் 4 வெவ்வேறு பட்டங்களைப் பெற்ற எனக்குக் கல்வி தகுதி இல்லை. ஒருவேலை பிரதமர் மோடி படித்த Entire Political Science படிப்பில் பட்டம் வாங்கியிருந்தால் படித்தவர் என சொல்லியிருப்பார்" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவை அடுத்து தி.மு.க அரசின் அமைச்சரவையில் உள்ளவர்கள் என்னென்ன பட்டங்களைப் பெற்றுள்ளனர், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் பட்டங்களை பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியலை சமூகவலைதளத்தில் வெளியிட்டு ஜே.பி.நட்டாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.