தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவர்கள் சிலர் அங்குள்ள பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்குவதற்காக சென்றனர். அப்போது அந்த கடை உரிமையாளர் "உங்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது.. ஊர் கட்டுப்பாடு வந்துள்ளது.. உங்கள் தெரு பிள்ளைகள் யாருக்கும் வழங்க முடியாது.." என்று கறாராக கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இன்று இணையத்தில் வைரலான நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில் கோட்டாச்சியர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தார். மேலும் அந்த பெட்டிக்கடை உரிமையாளர்களான மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் தென்காசி மாவட்ட கலெக்டர், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஞாயம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு பாஞ்சாகுளம் கிராமத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கிராமத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாடும்போது இளைஞர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த இளைஞர்களை மாற்று சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் ஜாதி ரீதியாக திட்டியதால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் உட்பட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்தே பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த பெண்களையும் குழந்தைகளையும் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கேலியும் கிண்டலும் பேசுவதுமாக இருந்து வந்துள்ளனர்.
இதையடுத்து தற்போது நடைபெற்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசு இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பெரும்புத்தூர் கிராமம், மஜரா பாஞ்சாகுளத்தில் பட்டியல் இன பறையர் சமுதாய மக்களின் குழந்தைகளுக்கு யாதவர் இனத்தைச் சேர்ந்தவரின் கடையில் எவ்வித திண்பண்டங்களும் வழங்க கூடாது என கூறி வாட்ஸ்-அப் மூலம் வீடியோ பதிவு பரவியதை தொடர்ந்து, உடனடியாக விசாரணை செய்யப்பட்டதில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பெரும்புத்தூர் கிராமம், மஜரா பாஞ்சாகுளத்தில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு யாதவர் சமுதாயம் மற்றும் பட்டியல் இன பறையர் சமுதாய மக்களுக்கு இடையே நடந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கானது இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது.
தற்போது யாதவர் சமுதாயத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் ராமகிருஷ்ணன் என்பவர் மத்திய அரசு பணிக்கு தேர்வாகியுள்ள நிலையில் யாதவர் சமுதாய மக்கள் பறையர் சமுதாய மக்களிடம் சென்று ராமகிருஷ்ணன் என்பவர் மேல் உள்ள வழக்கினை வாபஸ் பெற கேட்டுள்ளனர். இதற்கு பறையர் சமுதாய மக்கள் தங்கள் சமுதாயத்தினர் மேல் யாதவர் சமுதாய மக்களால் போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால் மட்டுமே பதிலுக்கு ராமகிருஷ்ணன் (இந்து யாதவர்) மேல் போடப்பட்டுள்ள வழக்கினை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கண்ட கிராமத்தில் உள்ள யாதவர் சமுதாய நாட்டாண்மை திரு.மகேஷ் த-பெ சுந்தரைய்யா என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் பறையர் சமுதாய சிறுவர் சிறுமிகள் திண்பண்டங்கள் கேட்டதற்கு தர மறுத்துள்ளதாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வரப்பெற்றுள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலைய குற்ற எண்.377/2022 பிரிவு 153 Class A IPC நாள் 17.09.2022 ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் மகேந்திரன் மற்றும் இராமச்சந்திரன் என்ற மூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட சம்பவம் குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 133 (1) (ஆ)ன் கீழ் வருவதால் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பெரும்பத்தூர் கிராமம் மஜரா பாஞ்சாங்குளம் கிராமம் திருமகேஷ் த-பெசுந்தரைய்யா என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடை சங்கரன்கோவில் வட்டாட்சியரால் இன்று (17.09.2022) தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.