சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று காலை 7.35 மணிக்கு செல்லும் துபாய் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அதில் பயணம் செய்யவிருக்கும் கணவன் - மனைவியாக செல்பவர்களிடமும் வெடிகுண்டு இருப்பதாகவும் மர்ம நபர் ஒருவர் சென்னை மாநகர காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு மொபைல் பேசி மூலம் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால் பதறி போன அதிகாரிகள், விமான நிலைய ஆணையத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிற்படை அதிகாரிகள், விமான நிலைய காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் விரைந்து சென்று துபாய் செல்லும் விமானத்தில் பயணிகளை ஏற விடாமல் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அந்த சோதனையில் வெடிகுண்டு இல்லை என்று தெரியவந்தது. மேலும் பயணிகளிடம் நடத்திய சோதனையிலும் வெடிகுண்டு இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மாநகர காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தொடர்புகொண்ட மொபைல் எண்ணை வைத்து அந்த மர்ம நபரை அதிகாரிகள் கண்டுபிடிக்க முயன்றனர்.
அப்போது அது சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற மாரி வேலன் (வயது 45) என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தனது தங்கை தன்னுடன் சண்டை போட்டு விட்டு, அவர் கணவர், குழந்தையை கூட்டி துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்தார். அவர்களை தடுக்கவே தான் இப்படி செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்மீது 294 b (பிறருக்குத் தொல்லை தருதல்), 507,506(i) (மிரட்டல் விடுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் விமான நிலைய காவல் நிலையத்தில் இருந்து ரஞ்சித் குமாரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த நீதிபதி, ரஞ்சித் குமாரை 10 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் ரஞ்சித் குமாரை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.