டேக் கேர் இண்டர்நேஷனல் பவுண்டேஷன் (Take Care International Foundation) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் குடிமக்கள் கவுரவமான, மகிழ்ச்சி நிறைந்த, நல்லதொரு வாழ்க்கையை நடத்துவதற்கான சேவைகளை ஆற்றி வருகிறது.
இவ்வமைப்பு ஆண்டுதோறும் மானுட வளர்ச்சிக்காகத் தன்னலம் கருதாது சேவை செய்து வரும் பிரமுகர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மானுடத்தின் பெருமை (Pride of Humanity) என்ற பெயரில் விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது.
அவ்வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான மானுடத்தின் பெருமை விருது பெறும் ஒருவராக எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை இணைச் செயலாளருமான வழக்கறிஞர் இ.பரந்தாமன், தனது தொகுதி மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 7 மாதங்களில் நிறைவேற்றியதற்காக Pride of Humanity விருது வழங்கப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள காந்தி இர்வின் சாலையில் வசிக்க வீடின்றி நடைபாதையில் வசித்து வந்த 59 குடும்பங்களுக்கு, தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள்ளாகவே, தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனிதநேயமிக்க ஒத்துழைப்போடு, அக்குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் சென்னை, புளியந்தோப்பில் அமைந்துள்ள கே.பி.பார்க்-தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கிக் குடியமர்த்தி, அவர்களின் துயரத்தைப் போக்கியதன் அடிப்படையில் Pride of Humanity விருதுக்கு இ.பரந்தாமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது வழங்கும் விழா வியாழன் அன்று மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில், ராயல் சுலான் (Royale Chulan) எனுமிடத்தில் நடைபெற்றது அப்போது தி.மு.க எம்.எல்.ஏ இ.பரந்தாமனுக்கு Pride of Humanity விருது வழங்கப்பட்டது.