முரசொலி மாறன் அவர்களின் நினைவு இன்று..!
அவரைப் பற்றி பேசும் பொழுது அவர் தலைவர் கலைஞரின் மனசாட்சி என்றே அனைவரும் கூறுவர். அது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்றாலும், அந்த ஒரு கூற்றை வைத்துக்கொண்டு, கூடவே அவர் தலைவர் கலைஞரின் உடன்பிறந்த சகோதரியின் மகன் என்ற அடையாளத்தோடு முடிச்சு போட்டு... இவரையும் கலைஞர் குடும்பத்து வாரிசு அரசியல் பட்டியலில் அடைத்து... அவரது திறமை, உழைப்பு, தியாகம், அறிவு... இப்படி அனைத்தையும் வெளி உலகிற்கு காட்டாமல் மறைத்துவிடுவர் நம் சங்கிகள்..!
ஆனால் ஐயா முரசொலி மாறன் அவர்களுக்கான முழு அரசியல் கதவையும் திறந்து விட்டு, தனக்குப் பிறகான டெல்லி அரசியலின் திராவிடக் குரலாக வழி அனுப்பி வைத்ததே பேரறிஞர் அண்ணா அவர்கள் தான்..! ஆம், தான் வகித்து வந்த தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து தமிழக முதல்வர் பொறுப்புக்கு மாறும் பொழுது, தனது டெல்லி பிரதிநிதியாக அதே தொகுதியிலிருந்து முரசொலி மாறன் அவர்களைத்தான் அண்ணா அனுப்பி வைத்தார்..! அதற்கு காரணம் இருக்கின்றது.
திராவிட முன்னேற்ற கழகம் தனித் திராவிட நாடு கோரிக்கையை கை விட்ட பிறகு, அந்த கோரிக்கைக்கான காரணங்களை இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு வென்றெடுக்க முன் வைத்த செயல்திட்டம் தான் "மாநில சுயாட்சி".
பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரின் அந்த கனவுக்கு மிகத் தெளிவான உருவத்தையும் அதை அடைவதற்கான செயல் வடிவத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் ஐயா முரசொலி மாறன் அவர்கள்!
அதை வென்றெடுக்க தமிழகத்தில் அரசியல் செய்து கொண்டிருந்தால் ஆகாது என்கிற நிலையில்தான் இவ்விஷயத்தில் தனக்கு இணையான சித்தாந்த தெளிவு கொண்ட ஒரு அறிவு ஜீவி தனக்கு அடுத்து டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று அண்ணா விரும்பினார்..!
அதன் காரணமாகவே... தான் நின்று வென்ற தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தனக்கு பதிலாக ஐயா முரசொலி மாறன் அவர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்து டெல்லி அரசியலுக்கு அனுப்பி வைத்தார் பேரறிஞர் அண்ணா..! ஆகவே தான் சொல்கிறேன் ஐயா முரசொலி மாறன் அவர்களை எந்த வாரிசு அரசியல் பட்டியலுக்குள்ளும் கொண்டு வரக் கூடாது... மாறாக அவர் திராவிட இயக்க சித்தாந்தத்தின் ஆகப் பெரிய இந்திய முகமாக திகழ்ந்ததை நாம் உரக்கச் சொல்ல வேண்டும் என்று..!
அவரைப் பற்றி மிக நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கிய புத்தகம் எழுதினாலே அது ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக வருவதோடு... திராவிட இயக்க சித்தாந்தத்தைப் பற்றிய உண்மையான புரிதலை நம் வருங்கால சந்ததிகளுக்கு உருவாக்கும்..!
- பத்திரிகையாளர் செளமியா வைத்தியநாதன்.