கோவை மாவட்டம் பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன் - பேபி தம்பதியினர். இவர்களுக்கு 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயதில் கிருத்திக் என்ற மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் பேபி தனது மகன் கிருத்திக்குடன் தனது தாயார் ராமத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று காலை குளிப்பதற்காக சூடு தண்ணீர் செய்வதற்காக வீட்டிலிருந்த மினி எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் கருவியை ராமாத்தாள் பயன்படுத்தியுள்ளார். வாட்டர் ஹீட்டரை ஆன் செய்து விட்டு வேறு வேலைக்காக ராமாத்தாள் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கிறார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த இடத்திற்கு வந்த 7வயது சிறுவன் வாட்டர் ஹீட்டரை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் தாக்கிய சிறுவன் சம்பவம் இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து வாட்டர் ஹீட்டரை அணைப்பதற்காக அங்கு வந்த ராமாத்தாள் பேரன் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கீழே விழுந்து கிடந்த பேரனை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சிறுவனின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த 3 மாதங்களில் மகனும் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.