திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள்.
இதனை அறிந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்பள்ளிக்கு சென்று மாணவிகளை ஆச்சர்யபட வைத்தார். மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து புத்தகங்களை பரிசளித்தார்.
இஸ்ரோவின் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ‘ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்’ தொழில்நுட்பத்துடன் ‘வான்வெளி உயரம், தட்பவெப்பம், ஈரப்பதம்’ ஆகியவற்றை உள்ளடக்கிய புரோகிராமை இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஸ் வேறொரு நிகழ்ச்சிக்காக மதுரை சென்றிருந்த நிலையில், இச்செய்தியினை அறிந்து அப்பள்ளிக்கு திடீரென சென்றார். அம்மாணவிகளையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சந்தித்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
10 மாணவிகளும் ஆகஸ்ட் மாதம் 7’ம் தேதி ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க இருக்கிறார்கள். மேலும் பள்ளியை பார்வையிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், கற்றல் முறையினையும் ஆய்வுசெய்து பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாக உறுதியளித்தார்.