கணிதத்தை கற்கண்டாக்க ஜோக்கர் மற்றும் கணிதமேதைகள் வேடம் அணிந்து அரசு பள்ளி ஆசிரியை யுவராணி மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் பாடம் நடத்துவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி கிராமத்தை சேர்ந்தவர் யுவராணி. கணித பட்டதாரி ஆசிரியையான இவர் திருப்பெரும்புதூர் அருகே உள்ள மாத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார்.
அரசு பள்ளியில் மட்டும் 18 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகின்றார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் ஆசிரியர் யுவராணி. வழக்கமாக கணிதம் என்றாலே அனைத்து மாணவர்களுக்கு கடினம் தான். ஆனால் கணித ஆசிரியை யுவராணி பல்வேறு வேடம் அணிந்து கணித பாடத்தை வித்தியாசமான முறையில் பாடம் நடத்தி வருகின்றார்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புலி வேடம் அணிந்து எண்களின் வகைகளை கற்பித்தும், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வடிவியல் பாடத்தில் தேல்ஸ் என்ற கணித மேதை வரலாற்றை கூறியும் தேல்ஸ், பிதாகரஸ், சகுந்தலா, சீனுவாச இராமனுஜம், ஜார்ஜ் கேன்டர், ஆர்யப்பட்டா, பிரமகுப்தா, பிபனோசி, யுக்ளிடின் ஆகியோர் வேடம் அணிந்தும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றார்.
ஜோக்கர் வேடம் அணிந்தாலும் பரவா இல்லை கணிதத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என பல முயற்சி மேற்கொண்டு வரும் கணித பட்டாதாரி ஆசிரியை யுவராணி, பாடம் எடுக்கும் போது கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சாக்லேட் வழங்கி ஊக்கப்படுத்திவருகிறார்.
கணித பாடம் எடுக்கும் ஆசிரியை அறை முழுவதும் கணித தொடர்பான சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. கணிதம் என்பது கற்கண்டு என்பதை உணரும் வகையில் இது போன்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
மாணவர்களையும் பல விதமானமான வேடம் அணிய வைத்தும் நாடகம் நடத்தியும் பாடம் நடத்தி வருகின்றார். இவர் ஏற்கனவே கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாணவர்களின் வீட்டிற்க்கே சென்று இலவசமாக பாடம் நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.