நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்தவர் கணேச கண்ணன். இவரும் அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரும் நெடுநாள் நண்பர்களாக இருந்துள்ளனர். சரவணன் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கணேச கண்ணனிடம் ரூ.10 லட்சம் வங்கியில் கடன் பெற்று தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கணேச கண்ணன் மறுத்த நிலையில், இது தொடர்பாக கணேச கண்ணன் மேல் சரவணன் கோவத்தில் இருந்துள்ளார்.
இதன்பின்னர் ஒருநாள் கணேசகண்ணன், சரவணனிடம் தனது செல்லை கொடுத்து Recharge செய்யும்படி கூறியுள்ளார். அப்போது கணேசகண்ணனின் மொபைல் மூலம், வங்கி எண், வங்கி விபரம் போன்றவற்றை சரவணன்அறிந்துள்ளார்.
பின்னர் இதன் மூலம் அவரின் எண்ணை செயல் இழக்க செய்து அதே எண்ணில் சிம் ஒன்றை வாங்கி அதில் Gpay மூலம் கணேசகண்ணனின் வங்கி கணக்கை தனது மொபைலில் இணைத்துள்ளார். பின்னர் வங்கி கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்தை Gpay மூலம் தான் கடன் வாங்கியவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில்,தனது வங்கிகணக்கில் இருந்து பணம் அடுத்தவர் கணக்குக்கு அனுப்பப்படுவதை அறிந்த கணேசகண்ணன் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின் வழக்கு சைபர் கிரைம் காவல்துறைக்கு மாற்றப்பட அவர்கள் நடத்திய விசாரணையில் கணேசகண்ணனை அவரின் நண்பரே ஏமாற்றியது தெரியவந்தது.
பின்னர், சரவணனிடமிருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணத்தை மீட்டு கணேச கண்ணனிடம் ஒப்படைத்த போலிஸார் சரவணனை கைது செய்தனர். நண்பனே சக நண்பனை ஏமாற்றி பணத்தை பறித்து வந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.