தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி என்ற பகுதியை சேர்ந்தவர் இராமலிங்கம். இவர் அதே பகுதியில் சிலைகள் விற்பனை செய்யும் கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடையில் இருந்து வெளிநாட்டிற்கு சிலைகள் கடத்துவதாக காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது கடையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடத்தப்பட்ட சோதனையின்போது, அங்கே பழமையான திருக்கடையூர் நடராஜர், கிருஷ்ணர், விநாயகர், சிவகாமி அம்மன், அர்த்தநாரீஸ்வரர், வல்லப கணபதி உடன் அம்மன் என ஆறு ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அதனை அந்த சிலைகளை பறிமுதல் செய்ததோடு கடை முதலாளியான இராமலிங்கத்தையும் காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவுஅதிகாரிகள் கூறுகையில், "எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில், ராமலிங்கத்தின் கடையை சோதனை செய்தோம். அங்கே ஆறு ஐம்பொன் சிலைகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து, அவரை கைது செய்தோம். பின்னர் மேற்கொண்ட விசாரணையில், இந்த சிலைகளை எல்லாம் பல நூறு கோடி ரூபாய்க்கு தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு விற்க இருந்தாக ஒப்புக்கொண்டார்.
இந்த சிலைகளை எல்லாம், 2015 ஆம் ஆண்டே வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய ராமலிங்கம் ஒன்றிய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் இவை அனைத்தும் பழமையானது என்பதால், தொல்லியல்துறை அவருக்கு அனுமதி வழங்கவில்லை.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இராமலிங்காலத்திடம் இருந்து, சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம். கைப்பற்றிய ஆவணங்களை பரிசோதித்ததில், இந்த சிலைகள் எல்லாம் கோயிலுக்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த சிலைகள் இராமலிங்கத்திடம் எப்படி வந்தது ? இதற்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தனரா ? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினர்.