தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திப்பிராஜபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் "நமக்கு நாமே" திட்டத்தின் வாயிலாக, கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக முதல்வரின் மீது நம்பிக்கை கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும், அரசு பள்ளிகளில் சேரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறினார்.
மேலும், உயரும் எண்ணிக்கைக்கு ஏற்பவும், வருங்கால உயர்வை கணித்தும், அதற்கு ஏற்ப புதிதாக கூடுதல் ஆசிரியர் நியமனமும், கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் அடுத்தடுத்து திறக்கப்பட்டும் வருகிறது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் இத்தகைய கல்வி வளர்ச்சிக்காகவும், பள்ளி கூடங்கள் மேம்படவும் அந்தந்த பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் உதவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.